ராமாயணத்துடன் தொடர்புடைய ஜட்டிங்க ராமேஸ்வர கோவில்
ராமாயணத்துடன் தொடர்புடைய ஜட்டிங்க ராமேஸ்வர கோவில்
ADDED : ஜூலை 21, 2026 02:55 AM

- நமது நிருபர் -:
சித்ரதுர்கா மாவட்டம், மொளகால்முரு பகுதிக்கு அருகில் ராமேஸ்வர மலை உள்ளது. இந்த மலை 3,500 அடி உயரம் கொண்டது. இம்மலையின் உச்சியில் ஜட்டிங்க ராமேஸ்வர கோவில் உள்ளது. சிவபெருமானுக்காக அர்ப்பணிக்கப்பட்ட கோவிலாகும். இக்கோவிலின் மூலவர் ஸ்ரீ ராமேஸ்வரர் சிவலிங்க வடிவில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். இக்கோவில் 1,000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது.
கோவிலின் சுற்றுப்பகுதிகளில் மன்னர் அசோகரின் கல்வெட்டுகள் உள்ளன. கி.பி., 10ம் நுாற்றாண்டில் சாளுக்கிய மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் கோவில் புதுப்பிக்கப்பட்டது.
அதுபோல, இக்கோவில் ராமாயணத்துடன் தொடர்புடையது. சீதா தேவியை பாதுகாக்க ஜடாயு என்ற கழுகு ராவணனுடன் சண்டையிட்டு இம்மலை மீது விழுந்தது. இக்கோவிலில் உள்ள சிவலிங்கத்தை ராமர் வழிபட்டதாக ராமாயணத்தில் கூறப்பட்டு உள்ளது.
இந்த கோவிலுக்கு மலையடிவாரம் வரை வாகனங்களில் வரலாம். அங்கிருந்து மலை உச்சிக்கு படிக்கட்டுகள் வழியே நடந்து தான் செல்ல வேண்டும். சிவபெருமானுக்கு முக்கிய நாளான மஹா சிவராத்திரி விமரிசையாக கொண்டாடப்படுகிறது. கார்த்திகை மாத திங்கட்கிழமைகள், பிரதோஷம் நாளில் பக்தர்கள் கூட்டம் கோவிலில் அதிகமாக காணப்படும். காலை 6:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை கோவில் திறந்திருக்கும்.
இந்த கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் உணவு, குடிநீர் போன்ற அத்தியாவசிய பொருட்களை எடுத்து செல்வது சிறப்பு. விசேஷ நாட்களில் மட்டும் கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.
எப்படி செல்வது?
l பெங்களூரிலிருந்து சித்ரதுர்கா 215 கி.மீ., துாரத்தில் உள்ளது. சித்ரதுர்காவிலிருந்து 100 கி.மீ., துாரத்தில் கோவில் உள்ளது. பெங்களூரு மெஜஸ்டிக் பஸ் நிலையத்திலிருந்து சித்ரதுர்கா பஸ் நிலையத்திற்கு பஸ்சில் செல்லலாம். அங்கிருந்து மாற்று பஸ்கள் மூலம் கோவிலை அடையலாம்.
l ரயில்: பெங்களூரு கே.எஸ்.ஆர்., ரயில் நிலையத்திலிருந்து ரயிலில் சித்ரதுர்கா சென்று, அங்கிருந்து, டாக்சி மூலம் கோவிலை அடையலாம்.
