/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஜெயலலிதா நகைகள் மதிப்பீடு செய்யும் பணி துவக்கம்!
/
ஜெயலலிதா நகைகள் மதிப்பீடு செய்யும் பணி துவக்கம்!
UPDATED : பிப் 14, 2025 06:30 PM
ADDED : பிப் 14, 2025 12:46 PM

பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் பறிமுதல் செய்யப்பட்ட தங்க, வைர நகைகளை மதிப்பீடு செய்யும் பணி, நீதிபதி மோகன் முன்னிலையில் தொடங்கியுள்ளது. தமிழக உள்துறை இணை செயலர் ஹனி மேரி, லஞ்ச ஒழிப்பு எஸ். பி., விமலா ஆகியோர் உடன் இருந்தனர்.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. இவர், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு, பெங்களூரு சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அந்த வழக்கில் தொடர்புடைய தங்கம், வெள்ளி, வைர நகைகள் அடங்கிய 6 டிரங்க் பெட்டிகள், 1,562 ஏக்கர் மதிப்பிலான நில ஆவணங்கள், கர்நாடக அரசு கருவூலத்தில் வைக்கப்பட்டிருந்தன.
வழக்கு முடிந்து போன நிலையில், ஜெயலலிதாவுக்கு சொந்தமான நகைகள், சொத்து ஆவணங்களை தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் ஒப்படைக்கும்படி கர்நாடகா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அவற்றைப் பெற்றுக் கொள்வதற்காக தமிழக லஞ்ச ஒழிப்பு போலீஸ் படையினர், இன்று கர்நாடகா அரசு கருவூலம் சென்றனர்.
அங்கு நீதிபதி மோகன் முன்னிலையில் ஒவ்வொரு பெட்டியாக திறந்து, நகைகளை எண்ணி, மதிப்பீடு செய்யும் பணி தொடங்கியுள்ளது. தமிழக உள்துறை இணை செயலர் ஹனி மேரி, லஞ்ச ஒழிப்பு எஸ். பி., விமலா ஆகியோர் உடன் இருந்தனர். அனைத்தும் சரி பார்த்து பட்டியல் தயார் செய்தபிறகே, தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் நகைகள், ஆவணங்கள் ஒப்படைக்கப்படும்.
இதற்கிடையில், ஜெயலலிதாவின் பொருட்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறி அவரது அண்ணன் மகள் மற்றும் மகன் தீபா, தீபக் உரிமை கொண்டாடினர். அவர்களது மனுவை கர்நாடகா உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றமும் இன்று தள்ளுபடி செய்து விட்டது.
நாளையும் தொடரும்
இன்று பிப்.,14 மாலை 5.45 மணிக்கு, மதிப்பீடு செய்யும் பணியில் பாதியளவே நிறைவு பெற்றுள்ளது. மொத்தமுள்ள 6 பெட்டிகளில், 3 பெட்டிகளில் இருந்த நகைகள் மதிப்பீடு செய்யப்பட்டன. மீதமுள்ள நகைகள், நாளை 15ம் தேதியன்று மதிப்பீடு செய்யப்பட உள்ளன.