ADDED : பிப் 07, 2026 06:45 AM

தாவணகெரே: பிரபலமான தனியார் கல்லுாரியில், இன்ஜினியரிங் முடித்த இளம்பெண், குடும்ப வாழ்க்கை மற்றும் சொத்து சுகங்களை துறந்து சன்னியாசம் ஏற்றார்.
தாவணகெரே நகரின், சவுகிபேட்டில் வசிப்பவர் முகேஷ்; தங்கநகை வியாபாரி. இவரது மனைவி சுனிதா. இத்தம்பதிக்கு மூன்று மகள்கள் உள்ளனர். முதலாவது, இரண்டாவது மகள்களுக்கு திருமணம் செய்துள்ளனர். மூன்றாவது மகள் ஆஞ்சல்குமாரி, 26, தாவணகெரேவின் பிரபலமான இன்ஜினியரிங் கல்லுாரியில் படித்து பட்டம் பெற்றவர்.
படிப்பில் சூட்டிகையான இவர், கல்லுாரியில் முதல் மாணவியாகவும் தேர்ச்சி பெற்றவர். வசதியான குடும்பம், பெற்றோர் ஏராளமான சொத்துகளை சேர்த்து வைத்துள்ளனர். ஆனாலும், ஆஞ்சல்குமாரிக்கு சமீப நாட்களாக ஆன்மிகத்தில் அதிக நாட்டம் ஏற்பட்டது. ஆடம்பர வாழ்க்கை, சொத்து, சுகங்களை விட்டு விட்டு சன்னியாசியாக மாறியுள்ளார்.
சூரத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், அவர் ஜெயின் சன்னியாச தீட்சை பெற்றுக் கொண்டார். மகளின் விருப்பத்துக்கு பெற்றோரும் சம்மதம் தெரிவித்தனர்.
