'சிஷ்யா' என்று கூறியதால் தகராறு :'ஜிம்' பயிற்சியாளர் அடித்து கொலை
'சிஷ்யா' என்று கூறியதால் தகராறு :'ஜிம்' பயிற்சியாளர் அடித்து கொலை
UPDATED : அக் 06, 2026 12:00 AM
ADDED : அக் 05, 2026 08:44 PM
அம்ருதஹள்ளி: 'சிஷ்யா' என்று கூறியதா ல் ஏற்பட்ட தகராறில், 'ஜிம்' பயிற்சியாளரை அடித்து கொன்ற, சக பயிற்சியாளர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெங்களூரின் அம்ருதஹள்ளியில் வசித்தவர் நந்தன், 25. ஜிம் பயிற்சியாளராக இருந்தார். இவர், வேலை பார்த்த ஜிம்மை துவக்கி கடந்த 3ம் தேதியுடன் ஓராண்டு நிறைவு பெற்றது. இதை முன்னிட்டு அங்கு நடந்த பார்ட்டியில் நந்தன், சக ஜிம் பயிற்சியாளர்கள் விஸ்வநாத், 25, சரத், 25, நிஷாந்த், 25 ஆகியோர் கலந்து கொண்டனர்.
பார்ட்டி முடிந்ததும் ஜிம்மிற்கு உடற்பயிற்சி செய்ய வரும் தொழில் அதிபர் அனுஷ் ஷெட்டியின், அடுக்குமாடி குடியிருப்புக்கு நந்தன், விஸ்வநாத், சரத், நிஷாந்த் சென்றனர். ஐந்து பேரும் அங்கு மது அருந்தினர்.
குடிபோதையில் இருந்த நிலையில், விஸ்வநாத்தை பார்த்து 'ஏ சிஷ்யா இங்கு வா' என்று நந்தன் கூறியுள்ளார்.
கோபம் அடைந்த விஸ்வநாத், 'என்னை சிஷ்யா என்று அழைக்காதே; சகோதரா என்று கூப்பிடு, இல்லாவிட்டால் பெயர் சொல்லி கூப்பிடு' என கூறினார். இதுதொடர்பாக விஸ்வநாத், நந்தன் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பாக மாறியது.
வீட்டின் கழிப்பறைக்கு நந்தனை இழுத்து சென்று விஸ்வநாத், சரத், நிஷாந்த் தாக்கி உள்ளனர். அப்போது அங்கிருந்த கண்ணாடி உடைந்து நந்தனின் தலை, முதுகு பகுதியில் குத்தியுள்ளது. ரத்த வெள்ளத்தில் அவர் சரிந்தார். போதையில் இருந்த மூன்று பேரும் அங்கிருந்து சென்று விட்டனர்.
நேற்று முன்தினம் காலை எழுந்து பார்த்த போது, நந்தன் நிலைகுலைந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் இறந்தார்.
நந்தன் குடும்பத்தினர் அளித்த புகாரில் விஸ்வநாத், சரத், நிஷாந்த், அனுஷ் மீது, அம்ருதஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சிஷ்யா என்று கூறியதால் நந்தனை தாக்கியதை, விஸ்வநாத், சரத், நிஷாந்த் ஒப்பு கொண்டதால், அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
அனுஷுக்கு கொலையில் தொடர்பு உள்ளதா என்று விசாரணை நடக்கிறது. சிஷ்யா என்று கூறியதால் மட்டும் தான் கொலை நடந்ததா அல்லது வேறு காரணம் உள்ளதா என்றும் போலீசார் விசாரிக்கின்றனர்.
