'ஹிந்தி தெரியாவிட்டால் வேலையில்லை' :மன்னிப்பு கேட்ட மேற்பார்வையாளர்
'ஹிந்தி தெரியாவிட்டால் வேலையில்லை' :மன்னிப்பு கேட்ட மேற்பார்வையாளர்
UPDATED : அக் 06, 2026 12:00 AM
ADDED : அக் 05, 2026 08:44 PM

நெலமங்களா: தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களிடம், 'ஹிந்தி தெரியாவிட்டால் வேலையை விட்டு வெளியேறுங்கள்' என்று கூறிய மேற்பார்வையாளர் அசோக், மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டார்.
பெங்களூரு நெலமங்களா பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான உணவு கிடங்கில் மேற்பார்வையாளராக இருப்பவர் அசோக், 30; ஆந்திராவை சேர்ந்தவர். இவர், 'ஹிந்தி தெரியாவிட்டால் வேலையை விட்டு வெளியேறுங்கள்' என ஊழியர்களிடம் ஹிந்தியிலேயே பேசினார்.
'கர்நாடகாவில் உள்ள கம்பெனியில் பணிபுரிவதற்கு, நாங்கள் எதற்கு ஹிந்தியில் பேச வேண்டும்' என ஊழியர்கள் பதிலளித்தனர். 'கர்நாடகாவில் இருந்தால் என்ன, ஹிந்தியில் தான் அனைவரும் பேச வேண்டும். இல்லையெனில், கம்பெனிக்கு வராதீர்கள்' என அசோக் கூறினார்.
அவர் பேசுவதை தங்களது மொபைல் போனில் ரகசியமாக வீடியோ எடுத்த ஊழியர்கள், சமூக வலைத்தளங்களில் நேற்று முன் தினம் பதிவேற்றினர். இதையடுத்து, அசோக்கை பலரும் கண்டித்தனர். 'கம்பெனி முற்றுகையிடப்படும்' என கன்னட அமைப்பினர் எச்சரித்தனர்.
இதற்கு பயந்த அசோக், கைகூப்பி மன்னிப்பு கேட்டு, நேற்று வீடியோ வெளியிட்டார். 'என்னை மன்னித்து விடுங்கள். கன்னடம் குறித்து தவறாக பேசி விட்டேன். இதுபோன்ற தப்பை மீண்டும் செய்ய மாட்டேன்' என்று அவர் வீடியோவில் கூறினார்.
இந்த வீடியோவில், அவர் கன்னடத்தில் பேசியது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக, அசோக் மீது மாதநாயக்கனஹள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விசாரிக்கின்றனர்.
