/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மேற்கு தொடர்ச்சி மலையின் ஜோயி சாராஹூன்டி நீர்வீழ்ச்சி
/
மேற்கு தொடர்ச்சி மலையின் ஜோயி சாராஹூன்டி நீர்வீழ்ச்சி
மேற்கு தொடர்ச்சி மலையின் ஜோயி சாராஹூன்டி நீர்வீழ்ச்சி
மேற்கு தொடர்ச்சி மலையின் ஜோயி சாராஹூன்டி நீர்வீழ்ச்சி
ADDED : ஜூலை 31, 2025 05:53 AM

குஜராத் மாநிலத்தில் துவங்கும் மேற்கு தொடர்ச்சி மலை, மஹாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களை கடந்து தமிழகம் வரை 1,600 கி.மீ., துாரத்திற்கு பரவி விரிந்துள்ளது. இந்த மலைக்குள் நிறைய நீர்வீழ்ச்சிகள் உள்ளன.
இதில் சில நீர்வீழ்ச்சிகள் சுற்றுலா பயணியரால் நிறைய அறியப்படாத பகுதிகளாக உள்ளன. இதில் ஒன்று உடுப்பி மாவட்டம், கார்கலா தாலுகா மாலா கிராமத்தில் உள்ள ஜோயி சாராஹூன்டி நீர்வீழ்ச்சி.
பசுமையான காடுகளுக்கு நடுவில் கேட்கும் ஒரு இரைச்சல் சத்தம். அங்கு சென்று பார்த்தால் பாலை கொட்டுவது போல விழும் ஜோயி சாராஹூன்டி நீர்வீழ்ச்சியின் தண்ணீர். இது மற்ற நீர்வீழ்ச்சிகளை போல பெரியது இல்லை.
ஆனாலும் தண்ணீரின் நிலையான ஓட்டம், பாறைகளில் இருந்து ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர் சுற்றுலா பயணியரை வெகுவாக கவரும் வகையில் உள்ளது.
பாறைகள் மீது ஏறி அருவியின் உச்சி பகுதிக்கு சென்று தண்ணீர் விழுவதை பார்க்க கண்கொள்ளா காட்சியாக இருக்கும். வனப்பகுதிக்குள் நடந்து செல்லும்போது, அரிய வகை பறவைகளை காண முடியும். பல வகை தாவர இனங்களை கண்டுகளிக்கும் வாய்ப்பும் உண்டு.
இந்த இடம், அதிகம் அறியப்படாததால் சுற்றுலா பயணியர் கூட்டம் குறைவாக இருக்கும். நீர்வீழ்ச்சிக்கு செல்லும் பாதை சற்று ஆபத்தானது மற்றும் கடினமாகவும் இருக்கும். மலையேற்றம் செல்வோருக்கு ஏற்ற இடமாக இந்த நீர்வீழ்ச்சி இருக்கும்.
உள்ளூர் மக்களும் இங்கு சுற்றுலா வருகின்றனர். அருவிக்குள் நுழையும் பகுதியில் பரசுராமர் கோவிலும் உள்ளது. அந்த கோவில் அருகில் நிறைய பழங்கால வீடுகளும் உள்ளன. அங்கு சென்றும் புகைப்படங்கள் எடுத்துக் கொள்ளலாம்.
பெங்களூரில் இருந்து மாலா கிராமம் 377 கி.மீ., துாரத்தில் உள்ளது. மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் இருந்து உடுப்பி, கார்கலாவுக்கு கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்கள் செல்கின்றன. ரயிலில் செல்பவர்கள் உடுப்பி ரயில் நிலையத்தில் இறங்கி, வாடகை கார்களில் செல்லலாம்.
விமானத்தில் செல்வோர் மங்களூரு விமான நிலையத்தில் இறங்கி, வாடகை கார், பஸ் மூலம் மாலா கிராமம் செல்லலாம்.
- நமது நிருபர் -