/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பஞ்சமசாலி சமூகம் மீது தடியடி; நீதிபதி விசாரணைக்கு உத்தரவு
/
பஞ்சமசாலி சமூகம் மீது தடியடி; நீதிபதி விசாரணைக்கு உத்தரவு
பஞ்சமசாலி சமூகம் மீது தடியடி; நீதிபதி விசாரணைக்கு உத்தரவு
பஞ்சமசாலி சமூகம் மீது தடியடி; நீதிபதி விசாரணைக்கு உத்தரவு
ADDED : ஏப் 05, 2025 02:15 AM
தார்வாட் : சுவர்ண விதான் சவுதா முன்பு போராட்டம் நடத்திய, பஞ்சமசாலி சமூகத்தினர் மீது தடியடி நடத்தப்பட்டது குறித்து நீதிபதி விசாரணைக்கு, உயர் நீதிமன்றத்தின் தார்வாட் கிளை உத்தரவிட்டுள்ளது.
பெலகாவி சுவர்ண விதான் சவுதாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், கர்நாடக சட்டசபை கூட்டத்தொடர் நடந்தது. சுவர்ண விதான் சவுதாவில் இருந்து 2 கி.மீ., தள்ளி அமைக்கப்பட்டு இருந்த போராட்ட களத்தில், பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
பஞ்சமசாலி சமூகத்தினர் தங்களுக்கு 2ஏ இடஒதுக்கீடு கேட்டு போராடினர். சுவர்ண விதான் சவுதாவை, டிராக்டர்களில் ஊர்வலமாக சென்று முற்றுகையிட தயாராகினர். இதனால் போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.
தடியடி குறித்து விசாரணை நடத்த, அரசுக்கு உத்தரவிட கோரி, உயர் நீதிமன்றத்தின் தார்வாட் கிளையில், கூடலசங்கமா பஞ்சமசாலி மடத்தின் மடாதிபதி பசவ ஜெய மிருத்யுஞ்ஜெய சுவாமி மனு தாக்கல் செய்தார். நீதிபதி சச்சின் சங்கர் நேற்று விசாரித்தார்.
மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் பிரபுலிங்க நவதகி வாதிடுகையில், ''அமைதியாக போராட்டம் நடத்தியவர்கள் மீது, தீங்கிழைக்கும் நோக்கில் தடியடி நடத்தப்பட்டது,'' என்றார்.
அரசு சார்பில் ஆஜரான வக்கீல் பிரசன்னகுமார் வாதிடுகையில், ''சுவர்ண விதான் சவுதா மீது கல்வீச்சு தாக்குதல் நடத்த, திட்டம் இருப்பதாக தகவல் கிடைத்ததால் போராட்டக்காரர்கள் மீது, தடியடி நடத்தப்பட்டது. ஒரே நேரத்தில் 500 பேர் விதான் சவுதாவிற்குள் சென்றால் என்ன ஆகும். வேறு வழியின்றி தடியடி நடத்தப்பட்டது,'' என்றார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சச்சின் சங்கர், தடியடி குறித்து ஓய்வு நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த, அரசுக்கு உத்தரவிட்டார். அடுத்த விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.

