பொங்கலுக்கு பிறகு தேஜ கூட்டணியில் பல கட்சிகள் இணையும்; நயினார் நாகேந்திரன் கணிப்பு
பொங்கலுக்கு பிறகு தேஜ கூட்டணியில் பல கட்சிகள் இணையும்; நயினார் நாகேந்திரன் கணிப்பு
ADDED : ஜன 01, 2026 09:21 PM

திருநெல்வேலி: ''பொங்கலுக்குப் பின், தேசிய ஜனநாயக கூட்டணியில், மேலும் பல கட்சிகள் இணையும்,'' என தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில் 17, 18 வயதுள்ள இளைஞர்கள் கையில், பாட புத்தகங்களுக்கு பதில் அரிவாள் இருப்பது மிகுந்த வேதனையாக உள்ளது. தமிழகத்தில் தொடர்ச்சியாக நடக்கும் குற்றச்செயல்கள் குறித்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளேன்.தமிழகத்தின் தற்போதைய சட்டம்-ஒழுங்கு சீர்குலைவுக்கு நடவடிக்கையாக ஆட்சியை கலைக்க வேண்டியதில்லை. வரும் சட்டசபை தேர்தல் வாயிலாக தானாகவே அது நடந்துவிடும்.
தமிழக காங்கிரசுக்குள் ஏராளமான குழப்பங்கள் உள்ளன. கோஷ்டிகளாக மோதிக் கொள்கின்றனர். த.வெ.க.,வுடன் கூட்டணிக்கு சிலர் முயற்சிக்கின்றனர். இது தான், அங்கே பெரும் பிரச்னையாக உள்ளது. கடந்த 1996ல், காங்கிரசில் இருந்து பிரிந்து, த.மா.கா., உருவானது. அதைப் போன்றதொரு சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது. பொங்கலுக்குப் பின், தேசிய ஜனநாயக கூட்டணியில், மேலும் பல கட்சிகள் இணையும்.
தமிழகத்தில் முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில் ரூ. 4.5 லட்சம் கோடியாக இருந்த மாநிலக் கடன், தற்போது ரூ.9 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. நிதி மேலாண்மை சரியில்லாததால், மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நடிகர் விஜய் சில நிகழ்வுகளுக்கு மட்டுமே கருத்துச் சொல்கிறார். அது சரியான அணுகுமுறை அல்ல. முன்னாள் அமைச்சர், பன்னீர்செல்வம் மீண்டும் அ.தி.மு.க.,வில் இணைந்தால் வரவேற்கிறேன். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.

