7வது நாளாக இன்றும் போராட்டம்; சென்னை சாலையில் மன்றாடிய இடைநிலை ஆசிரியர்கள்
7வது நாளாக இன்றும் போராட்டம்; சென்னை சாலையில் மன்றாடிய இடைநிலை ஆசிரியர்கள்
ADDED : ஜன 01, 2026 09:48 PM

சென்னை: சம வேலைக்கு சம ஊதியம் கோரி, சென்னையில் மண்டியிட்டு, இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர்.
அரசு தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள், 'சம வேலைக்கு சம ஊதியம்' என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி, போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ., வளாகம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலகம், எழிலகம், வட்டார கல்வி அலுவலகம் என, அரசு துறை அலுவலகங்களில் முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஏழாவது நாளாக இன்று, புத்தாண்டு தினத்தன்றும் இடைநிலை ஆசிரியர்கள் சென்னையில் போராட்டம் நடத்தினர். சென்னை எழும்பூரில் உள்ள வட்டார கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். காந்தி இர்வின் சாலை மேம்பாலத்தில், குழந்தைகளுடன் போராட்டம் நடத்தினர்.
சாலையில் மண்டியிட்டும், தோப்புக்கரணம் போட்டும், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை, போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர். அதில், பலருக்கு காயம் ஏற்பட்டதாகவும், மயக்கம் ஏற்பட்டதாகவும் தெரிகிறது.
இது குறித்து, அந்த சங்கத்தின் மாநில பொதுச் செயலர் ராபர்ட் கூறியதாவது:எங்களுக்கான ஊதிய முரண்பாடு எப்போது களையப்படுகிறதோ, அப்போதுதான், எங்க ளு க்கு புத்தாண்டு கொண்டாட்டம். எங்கள் புத்தாண்டு சிறையில் தான். கோரிக்கை நிறைவேறாமல், நாங்கள் திரும்ப செல்ல மாட்டோம்.
அரசு ஆசிரியர்களுக்கான அடிப்படை ஊதியத்தை பறிப்பதால், இனி தகுதியான ஆசிரியர்கள் இந்த பணிக்கு வர தயங்குவர். இதனால், அரசு பள்ளி மாணவர்கள் மிகுந்த பாதிப்பை சந்திப்பர். இத்தனை நாட்கள் போராட்டம் நடத்தியும், எங்களை பேச்சுக்கு அழைக்காமல், அரசு மவுனம் காக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
பேச்சு நடத்தாமல் கைது செய்வதா?
போராடும் ஆசிரியர்களை அழைத்து பேசாமல், கைது செய்வதும், வழக்குப் போடுவதும் சரியானதல்ல. புத்தாண்டு நாளில் கூட சொந்த ஊர் செல்லாமல், போராடுவதிலிருந்தே அவர்களது கோரிக்கைகளில் உள்ள நியாயத்தை, அரசு உணர வேண்டும். ஒரு வாரமாக சென்னையில் போராடி வரும் இடைநிலை ஆசிரியர்கள் விவகாரத்தில், முதல்வரும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சரும் தலையிட்டு, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். - ராமதாஸ், பா.ம.க., நிறுவனர்

