கடவுள் ராமருடன் ராகுலை ஒப்பிட்ட காங்கிரஸ் தலைவர்: பாஜ, சிவசேனா எதிர்ப்பு
கடவுள் ராமருடன் ராகுலை ஒப்பிட்ட காங்கிரஸ் தலைவர்: பாஜ, சிவசேனா எதிர்ப்பு
ADDED : ஜன 01, 2026 10:29 PM

புதுடில்லி: கடவுள் ராமருடன், காங்கிரஸ் எம்பி ராகுலை ஒப்பிட்டு அக்கட்சி தலைவர் ஒருவர் பேசினார். அதற்கு பாஜ மற்றும் சிவசேனா கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
அயோத்தி ராமர் கோவிலுக்கு காங்கிரஸ் எம்பி ராகுல் செல்லாதது ஏன் என பாஜ கேள்வி எழுப்பி வருகிறது. இது குறித்து மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த,காங்கிரஸ்எம்எல்ஏவும், அக்கட்சியின் மாநில முன்னாள் தலைவரான நானா படோலிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
ராமர் சித்தாந்தம்
இதற்கு அவர் அளித்த பதில்: கடவுள் ராமர் பாதையை ராகுல் பின்பற்றி செயல்படுகிறார். இன்று நாட்டின் மக்கள் துன்பப்படுவதைப் போலவே, அந்த காலத்தில் ஒடுக்கப்பட்ட மற்றும் துன்பப்படும் மக்களுக்கு நீதி வழங்குவதில் கடவுள் ராமர் ஆற்றிய பணியை ராகுலும் செய்து வருகிறார். அதே சித்தாந்தத்தின்படி ராகுல் செயல்படுகிறார். இருவரையும் சமன்படுத்தநான் விரும்பவில்லை. கடவுள் கடவுள் தான். நாம் மனிதர்கள்.
ஒடுக்கப்பட்டவர்களுக்காகவும், துன்பப்படுபவர்களுக்காகவும் ராகுல் பாடுபடுகிறார். விவசாயிகளுக்காக, நாட்டிற்காக, அரசியலமைப்பிற்காக, பாடுபடுகிறார். ராமராஜ்ஜியம் பற்றி பேசுகிறார். அதில் எந்த தவறும் இல்லை. ராகுல் அயோத்தி செல்லும்போது அவர் ராமர் கோவிலில் தரிசனம் செய்வார். ராஜிவ் பிரதமராக இருந்தபோது, அவர் ராமர் கோவில் கதவுகளை திறந்து பூமி பூஜை செய்தார். எங்களுக்கு எங்கள் நம்பிக்கையும் பக்தியும் உள்ளது. நாங்கள் தலைவணங்குகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
கேலி செய்த காங்கிரஸ்
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பாஜவின் செஷாத் பூனவல்லா கூறியதாவது: மீண்டும் ஒரு முறை ராகுல் ராமரைப் போன்றவர் என்று கூறும் காங்கிரஸ் அனைத்து அவதூறு வரம்புகளையும் தாண்டிவிட்டது. முன்பு, தெலுங்கானாவில் கிறிஸ்துமஸ கொண்டாட்டங்களுக்கு சோனியாவே காரணம் என்று கூறினர். ராமர் கோவிலை எதிர்த்த, கும்பாபிஷேகத்தை கேலி செய்தது இதே காங்கிரஸ் தான். இவ்வாறு அவர் கூறினார்.
ராகுலை கேட்பாரா
பாஜவின் சி.ஆர்.கேசவன் கூறியதாவது: நானா படோலின் கருத்து, கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கைக்கு மன்னிக்க முடியாத அவமானத்தை ஏற்படுத்தி உள்ளது. ராமர் கோவிலை கும்பாபிஷேகத்தை கிண்டல் செய்தது ஏன் என ராகுலை அவர் கேட்பாரா அல்லது ராமர் கோவிலுக்கு செல்லாதது ஏன் எனவும் கேட்பாரா? இவ்வாறு அவர் கூறினார்.
ராவணனுடன் ஒப்பிடுங்கள்
சிவசேனாவின் சஞ்சய் நிருபம் கூறியதாவது: நானா படோலின் கருத்து கேலிக்கூத்தானது. ராமர் கோவில் கட்டும் திட்டத்துக்கு காங்கிரஸ் எப்போதும் முட்டுக்கட்டை போட்டு வந்தது. ராமர் இருப்பதே சந்தேகத்திற்குரியது என்று அக்கட்சி கேள்வி எழுப்பியது. இப்படிப்பட்டவர்கள் முன்வந்து தங்கள் தலைவர் ராமரின் கொள்கைகளை பின்பற்றுகிறார். அதனால் அவரை ராமர் உடன் ஒப்பிடுங்கள் என்று கூறுகிறார்கள். நான் அவர்களிடம் சொல்ல விரும்புவது என்னவென்றால் ராமரின் பெயரை களங்கப்படுத்தாதீர்கள். அவர்களின் நடத்தை மற்றும் செயல்களைப் பார்க்கும்போது, அவர்களை ராமர் உடன் அல்ல, ராவணனுடன் ஒப்பிட வேண்டும் என்று நான் கூறுவேன். இவ்வாறு அவர் கூறினார்.

