/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
2 மாணவியர் தற்கொலை நீதி விசாரணைக்கு உத்தரவு
/
2 மாணவியர் தற்கொலை நீதி விசாரணைக்கு உத்தரவு
ADDED : ஜூலை 10, 2025 03:56 AM
சிக்கமகளூரு: கொப்பாவின், மொரார்ஜி உறைவிடப் பள்ளியில், இரண்டு மாணவியர் தற்கொலை செய்து கொண்டதை தீவிரமாக கருதும் மாநில அரசு, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
சிக்கமகளூரு மாவட்டம், கொப்பா தாலுகாவில் மொரார்ஜி தேசாய் உறைவிடப் பள்ளி உள்ளது. இதில் போம்லாபுரா அருகில் உள்ள ஹொக்கலிகே கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமி 9ம் வகுப்பு படித்து வந்தார். இவர் ஜூன் 29ம் தேதி கழிப்பறையில், துப்பட்டாவால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இரவு வரை தோழிகளுடன் நன்றாக சிரித்து பேசியவர், பொழுது விடிவதற்குள் தற்கொலை செய்து கொண்டது, மற்ற மாணவியருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதே போன்ற சம்பவம், இதற்கு முன்னும் நடந்துள்ளது.
கடந்த 2023 ஜூலை 27ல், இதே உறைவிடப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்த 14 வயது மாணவி தற்கொலை செய்து கொண்டார். இரண்டு மாணவியரும், ஒரே இடத்தில், ஒரே இரும்புக் கம்பியில் ஒரே பாணியில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது மாணவியரின் பெற்றோருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. விசாரணைக்கு வலியுறுத்தி வந்தனர்.
இதையடுத்து, மாநில அரசும் இரண்டு மாணவியர் தற்கொலை விஷயத்தை, ஓய்வு பெற்ற நீதிபதி ஷோபா தலைமையில் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. உறைவிடப் பள்ளி முதல்வர் ரஜனி மற்றும் வார்டன் சுந்தர் நாயக் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.