அனைத்து சமூகத்திற்கும் நீதி வழங்கினார்: எடியூரப்பாவுக்கு சித்தராமையா பாராட்டு
அனைத்து சமூகத்திற்கும் நீதி வழங்கினார்: எடியூரப்பாவுக்கு சித்தராமையா பாராட்டு
UPDATED : அக் 29, 2026 12:00 AM
ADDED : அக் 28, 2026 11:14 PM

பெங்களூரு: ‘‘அனைத்து சமூகத்திற்கும் நீதி வழங்கினார்,’’ என, பா.ஜ., முன்னாள் முதல்வர் எடியூரப்பாவை, காங்கிரசை சேர்ந்த சித்தராமையா பாராட்டி உள்ளார்.
மைசூரு கே.ஆர்.நகரில் லிங்காயத் சமூகம் சார்பில், பசவ ஜெயந்தி நேற்று கொண்டாடப்பட்டது. காங்கிரஸ் முன்னாள் முதல்வர் சித்தராமையா பங்கேற்றார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
நான் எட்டு ஆண்டுகள் முதல்வராக இருந்துள்ளேன். 17 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளேன். தற்போது எம்.எல்.ஏ.,வாக மட்டும் உள்ளேன். ஆனால் இனியும் தீவிர அரசியலில் ஈடுபடுவேன். முதல்வராக தொடர்ந்திருந்தால், பீதரில் உள்ள அனுபவ மண்டப பணிகள் நிறைவு பெற்றிருக்கும்.
தற்போதைய முதல்வராலும் இந்த பணியை நிறைவு செய்ய முடியும் என நினைக்கிறேன். சமூகத்தில் இன்றும் ஜாதி அமைப்பு நிலவுகிறது. வெறுப்பு, பகைமை உள்ளது. இதில் சில சக்திகள் லாபம் அடைகின்றன.
லிங்காயத் சமூகத்திற்கு நிறைய பங்களிப்பு அளித்து உள்ளோம். எடியூரப்பா முதல்வராக இருந்த போது அனைத்து சமூகத்திற்கும் நீதி வழங்கினார். லிங்காயத் சமூகத்தை அனைவரும் சேர்ந்து ஒன்றிணைக்க வேண்டும். சந்தர்ப்பவாத அரசியல் அதிகரித்துள்ளது. கவனமாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மேடையில் தனது அருகில் அமர்ந்திருந்த எடியூரப்பாவின் மகனும், பா.ஜ., தலைவருமான விஜயேந்திராவுடன், சித்தராமையா ஏதோ பேசி கொண்டிருந்தார். விஜயேந்திரா முதுகிலும் தட்டி கொடுத்தார்.
