/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஐந்தாவது முறையாக நிரம்பியது கபினி அணை
/
ஐந்தாவது முறையாக நிரம்பியது கபினி அணை
ADDED : அக் 25, 2025 10:59 PM

மைசூரு: பெங்களூரு, மைசூரு உட்பட, கர்நாடகாவின் தென் மாவட்டங்களில் நல்ல மழை பெய்ததால், கபினி அணை நடப்பாண்டு ஐந்தாவது முறையாக நிரம்பியது. விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து, நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
மைசூரு மாவட்டம், ஹெச்.டி.கோட்டே தாலுகாவின், பீச்சனஹள்ளி கிராமத்தில் உள்ள கபினி அணை, முதன் முறையாக நடப்பாண்டு மே மாதம் நிரம்பியது.
மைசூரு, பெங்களூரு உட்பட, கர்நாடகாவின் தென் மாவட்டங்களில் நல்ல மழை பெய்ததால், அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வருகிறது.
பாதுகாப்பு கருதி தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. எனினும், ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களிலும் அணை நிரம்பி இருந்தது. தற்போது அக்டோபர் இறுதியில், ஐந்தாவது முறையாக நிரம்பியுள்ளது. கடந்த 25 ஆண்டுகளில், தொடர்ந்து ஆறு மாதங்களாக கபினி அணை நிரம்பி இருப்பது, இதுவே முதன் முறை.
அணை நிரம்பியதால் ஏரிகள், கால்வாய்களுக்கு திறந்துவிடப்படுகிறது. அடுத்த இரண்டு, மூன்று மாதங்கள் அணை அதே அளவில் இருக்கும் என, எதிர்பார்க்கிறோம்.
அணையில் நீர் இருப்புள்ளதால், வரும் கோடை காலத்தில் குடிநீருக்கு பிரச்னை ஏற்படாது. பெங்களூரு, ஹெச்.டி.கோட்டே, டி.நரசிபுரா, மைசூரு மக்களுக்கு குடிநீர் வழங்கலாம். தேவைக்கு ஏற்ப தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
நஞ்சன்கூடு தாலுகாவின், கடகோளாவில் உள்ள தனியார் நீர் மின் உற்பத்தி நிலையத்துக்கு, 800 கன அடி தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. இங்கு ஐந்து மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகிறது. விவசாய நீர்ப்பாசனத்துக்கு அணையின் இடதுபுற கால்வாய்க்கு 800 கன அடி, வலதுபுற கால்வாயில் 50 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. அணையின் கொள்ளளவு 19.52 டி.எம்.சி.,யாகும். தற்போது இதே அளவு தண்ணீர் உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

