/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கர்நாடகாவின் 'கூமாப்பட்டி' சிக்கமகளூரின் கலசா
/
கர்நாடகாவின் 'கூமாப்பட்டி' சிக்கமகளூரின் கலசா
ADDED : டிச 11, 2025 06:01 AM

- நமது நிருபர் -:
சிக்கமகளூரு என்றவுடன், மனதிற்குள் ஞாபகம் வருவது இயற்கையான மலை பிரதேசம், காபி தோட்டங்களே. இந்த மாவட்டத்தின் பெரும் பகுதிகள் மரம், செடி, கொடி என பச்சையாகவே காட்சி அளிக்கும். 'காபியின் தாயகம்' என அழைக்கப்படும் சிக்கமகளூரில் உள்ள கலசா கிராமத்தை பற்றி தெரிந்து கொள்வோமா? சிக்கமகளூரில் இருந்து 55 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது கலசா. இந்த கிராமம் முழுதும் மலைகளாக காட்சி அளிக்கும். இயற்கை அன்னையின் மடியில் வைத்து தாலாட்டுவதை போன்ற பிரமிப்பை அளிக்கும்.
இங்குள்ள காற்றில் காபியின் மணம் வீசும். இங்கு காலடி எடுத்து வைத்தவுடன், சொர்க்கத்தில் இருப்பதை போன்ற பிரமிப்பை உருவாக்கும்.
இங்கு மலையை சுற்றியுள்ள சாலைகளில் பயணிக்கும் போது, ஏதோ வெளிநாடுகளுக்கு வந்தது போன்ற அனுபவம் கிடைக்கும். இங்குள்ள பத்ரா நதியின் அழகை நேரில் சென்று நிச்சயம் பார்க்க வேண்டும்.
பேரழகு அழகே பொறாமைப்படும் பேரழகாக பத்ரா நதி இருக்கிறது. 178 கி.மீ., துாரத்திற்கு நதி பாய்ந்து ஓடுகிறது. இந்த நதி அங்குள்ள கோவிலில் ஐந்து தீர்த்தமாக பக்தர்களுக்கு கொடுக்கப்படுகிறது.
இந்த கிராமத்தில் உள்ள கியாத்தனமக்கி மலைக்கு, 'டிரெக்கிங்' செல்ல அனுமதி உண்டு. இதற்கு ஒரு நபருக்கு 1,500 ரூபாய் செலுத்தினால் ஜீப்பில் செல்லலாம்.
ஜீப் நிறுத்திய இடத்தில் இருந்து இறங்கிய பின், 2.5 கி.மீ., துாரம் நடந்து சென்றால், மலையின் 'வியூ பாயின்ட்'டை அடையலாம்.
காபி தோட்டத்தை போல, சம்சே டீ தோட்டத்தையும் சுற்றி பார்க்கலாம். டீ துாள் எப்படி தயாரிக்கப்படுகிறது என்பதையும் நேரில் பார்த்து அறிந்து கொள்ளலாம். அறிந்து கொள்வதும், அறிய முற்படுவதும் தானே வாழ்வின் சிறப்பு. அதை இங்கே அனுபவிக்கலாம்.
அன்பு தேசம் இப்படி அனைத்தையும் சுற்றிப்பார்க்க 3 முதல் 7 நாட்கள் கூட ஆகலாம். ஒரு வேளை, உங்களுக்கு கலசாவை பிடித்து போனால், அங்கேயே மீதி வாழ்க்கையை நடத்தும் சூழல் கூட ஏற்படலாம். இதற்கு, இயற்கை மட்டுமின்றி அங்கு வாழும் அன்பான மக்களும் காரணமே.
இந்த பயணத்தின் மூலம் மலை, நதி, காபி தோட்டம், டீ தோட்டம் போன்றவற்றை நேரில் சென்று பார்க்கலாம். புகைப்பட கலைஞர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை தரும்.
இங்கு கிடைக்கும் துாய்மையான நீர், சுவாசிக்க சுத்தமான காற்று, எப்போதும் மேகங்களுடன் காட்சி அளிக்கும் வானம், அன்பை பரிமாறும் மக்கள் என சொல்லிக் கொண்டே போகலாம்.
ஒட்டு மொத்தத்தில் கலசா என்பது சாதாரண பயணமல்ல; அது இயற்கையோடு கலந்த வாழ்வின் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்.
இங்கு சுற்றிப்பார்க்க அனைவரும் தங்கள் சொந்த வாகனங்களிலே செல்ல வேண்டும். அப்போது தான் நிறைய இடங்களை நிம்மதியாக பார்த்து ரசிக்க முடியும்.
தமிழகத்தில் திடீரென டிரெண்டிங் ஆன ஊர் தான், விருதுநகர் மாவட்டத்தின் கூமாப்பட்டி. சில வாரங்களுக்கு முன், சமூக வலைதளங்களில் எந்த பக்கம் திரும்பினாலும், கூமாப்பட்டி என்ற ஊரை பற்றி தான் பேச்சு அடிபட்டது.
அதுபோல, தற்போது கர்நாடகாவில் சிக்கமளூரின் கலசாவை பற்றி தான் பேச்சு அடுபடுகிறது.

