/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
வெறுப்பு பேச்சு தடை மசோதா; சட்டசபையில் தாக்கல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்க திட்டம்
/
வெறுப்பு பேச்சு தடை மசோதா; சட்டசபையில் தாக்கல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்க திட்டம்
வெறுப்பு பேச்சு தடை மசோதா; சட்டசபையில் தாக்கல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்க திட்டம்
வெறுப்பு பேச்சு தடை மசோதா; சட்டசபையில் தாக்கல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்க திட்டம்
ADDED : டிச 11, 2025 05:51 AM

பெங்களூரு: ''அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும், வெறுப்பு பேச்சு தடை மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. மசோதாவை ஏற்க மாட்டோம்,'' என்று பா.ஜ., தலைவர்கள் அறிவித்து உள்ளனர்.
பெலகாவி குளிர்கால கூட்டத்தொடரில் சட்டசபையில் நேற்று உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் வெறுப்பு பேச்சு தடை மசோதா - 2025 ஐ தாக்கல் செய்து பேசுகையில், '' கர்நாடகாவில் வெறுப்பு பேச்சை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. வெறுப்பு பேச்சு மூலம் சமூகத்தில் அமைதியின்மை, வகுப்புவாத கலவரங்கள், சட்டம் - ஒழுங்கு சீர்குலைகிறது. இது தடுக்கப்பட வேண்டும். இந்த மசோதாவை உறுப்பினர்கள் அனைவரும் ஆதரிக்க வேண்டும்,'' என்றார். இந்த மசோதாவுக்கு பா.ஜ., உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பேச்சு உரிமை நசுக்க முயற்சிப்பதாக கூச்சல் எழுப்பினர். பதிலுக்கு காங்கிரஸ் உறுப்பினர்களும் கோஷம் எழுப்பியதால் அவையில் கூச்சல், குழப்பம் நிலவியது.
வாயை அடைக்க... இந்த மசோதா குறித்து மேல்சபை எதிர்க்கட்சி தலைவர் சலவாதி நாராயணசாமி கூறுகையில், ''வெறுப்பு பேச்சு தடை மசோதா எதிர்க்கட்சியினர் வாயை அடைக்கும் அரசின் முயற்சி. வெறுப்பு பேச்சு பேசும் காங்கிரஸ் தலைவர்கள் மீது நாங்கள் புகார் செய்தால் எந்த நடவடிக்கையும் எடுப்பது இல்லை. ஆனால் நாங்கள் ஏதாவது பேசும் போது, புகார் அளிக்கவில்லை என்றாலும் போலீசார் நடவடிக்கை எடுக்கின்றனர்,'' என்றார்.
தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பிரியங்க் கார்கே கூறுகையில், ''வெறுப்பு பேச்சு தடை மசோதா அரசியல் ரீதியானது இல்லை. வெறுப்பு பேச்சை தடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற உத்தரவு உள்ளது. இந்த உத்தரவை பா.ஜ., எதிர்க்கிறதா. சமூகத்தில் அனைவரும் அமைதியாக வாழ மசோதாவை கொண்டு வந்து உள்ளோம்,'' என்றார்.
பல அம்சங்கள் இனரீதியான அவதுாறு, பிறந்த இடம், ஜாதி, மதம் ஆகியவற்றின் அடிப்படையில் வெறுப்பு பேச்சு இந்த மசோதாவின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாக உள்ளது. வாய்மொழியாகவோ, எழுத்து வடிவிலோ, செய்கை மூலமோ, ஆன்லைன் மூலமோ கலவரத்தை துாண்டும் வகையில் பேசுவதும் வெறுப்பு பேச்சாக மசோதா மூலம் கருதப்படுகிறது.
சமூக வலைத்தளங்களில் பதிவிடப்படும் வகுப்புவாத மோதல் கலவரம் தொடர்பான பதிவுகளை நீக்க, உதவி போலீஸ் கமிஷனர், டி.எஸ்.பி.,க்கு இந்த மசோதா அதிகாரம் அளிக்கிறது.
முதல்முறையாக வெறுப்பு பேச்சு பேசுவோர் மீது வழக்குப்பதிவானால் அவருக்கு ஒரு ஆண்டு முதல் ஏழு ஆண்டு வரை சிறை தண்டனையும், 50,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படலாம்.
மீண்டும், மீண்டும் வெறுப்பு பேச்சு பேசினால் இரண்டு ஆண்டுகள் முதல் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். வெறுப்பு பேச்சு தடை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவானால் ஜாமினில் வெளியே வர முடியாது என்பது உட்பட பல அம்சங்கள் மசோதாவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

