கிரிக்கெட் மைதானம் கட்ட கன்னட அமைப்பினர் எதிர்ப்பு
கிரிக்கெட் மைதானம் கட்ட கன்னட அமைப்பினர் எதிர்ப்பு
ADDED : மே 20, 2026 10:49 PM
ஆனேக்கல்: ஆனேக்கலில் கிரிக்கெட் மைதானம் கட்டும் மாநில அரசின் திட்டத்துக்கு, விவசாயிகள், கன்னட அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
பெங்களூரு ஆனேக்கல் தாலுகாவில், 70 ஏக்கர் நிலத்தில், சர்வதேச கிரிக்கெட் மைதானம் கட்ட மாநில அரசு முடிவு செய்து உள்ளது. இதற்கு, 900 கோடி ரூபாய் செலவாகும் என திட்டமிடப்பட்டு உள்ளது.
மொத்தம், 80,000 பேர் அமரக் கூடிய அளவிலான மைதானம் கட்டப்பட உள்ளது. கூடுதலாக, விளையாட்டு வளாகம் கட்ட, 1,000 கோடி ரூபாய் செலவாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த மைதானம் கட்ட முடிவு செய்யப்பட்ட இடம், பன்னரகட்டா தேசிய பூங்காவில் இருந்து, 1.50 கி.மீ., தொலைவில் உள்ளது. இப்பகுதியில் மைதானம் அமைந்தால், வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படும் என கூறப்படுகிறது.
எனவே, இதற்கு விவசாயிகள், வனவிலங்கு ஆர்வலர்கள், கர்நாடக ராஷ்டிர சமிதி அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
இது குறித்து, கர்நாடக ராஷ்டிர சமிதி அமைப்பினர் கூறியதாவது:
பன்னரகட்டா பூங்காவில் இருந்து வெறும் 1.50 கி.மீ.,யில் மைதானம் கட்டப்பட உள்ளது. இங்கு மைதானம் கட்டப்பட்டால் மின்விளக்கில் இருந்து வரும் ஒளி, மக்கள் நடமாட்டம், வாகனங்களால் காற்று மாசுபாடு ஆகியவை ஏற்படும்.
இது, நகரமயமாக்கல் ஆவதை ஊக்கப்படுத்தும். இதனால், வனவிலங்குகளின் வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தும். மாநில அரசு விரிவான திட்ட அறிக்கையை வெளிப்படையாக வெளியிட வேண்டும்.
பெங்களூரில் ஏற்கனவே சின்னசாமி மைதானம் இருக்கும் போது, எதற்கு இன்னொரு மைதானம். அதுவும், பன்னரகட்டா வன விலங்குகள் பூங்கா அருகில் கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கு காரணம் என்ன. இவ்விஷயத்தில் அரசு தரப்பில் விளக்கம் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
