/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
முனிவர் கட்டிய கரிகான பரமேஸ்வரி கோவில்
/
முனிவர் கட்டிய கரிகான பரமேஸ்வரி கோவில்
ADDED : டிச 02, 2025 04:22 AM

உத்தர கன்னடா மாவட்டம் ஹொன்னாவரின் மேற்குதொடர்ச்சி மலை மீது அமைந்து உள்ளது 'ஸ்ரீ கரிகான பரமேஸ்வரி கோவில்'.
புராணங்கள்படி, பார்வதியின் உக்கிர வடிவமான பரமேஸ்வரி தேவி, ஹொன்னாவருக்கு அருகில் உள்ள இம்மலையின் உச்சியில், இயற்கையான பாறை வடிவில் தோன்றினார். பல நுாற்றாண்டுகளாக இப்பகுதி புனித இடமாக கருதப்படுகிறது. அத்துடன் இம்மலையே, பரமேஸ்வரியின் பாதுகாப்பில் இருப்பதாக நம்பப்படுகிறது.
ஒரு நாள், முனிவரான ஸ்ரீ ஸ்ரீதர சுவாமிகள், இங்கு வந்தபோது, இங்குள்ள புனித தன்மையை உணர்ந்தார். பின் கோவில் கட்டி பூஜைகள் செய்ய துவக்கினார். பரமேஸ்வரி தேவியை கரிகானம்மா என்றும், பண்டுரேஸ்வரி என்றும் அழைக்கின்றனர். இம்மலையை மட்டுமின்றி, வனப்பகுதியை பாதுகாப்பதாகவும், அனைவரையும் ஆசிர்வதிப்பதாகவும் பக்தர்கள் நம்புகின்றனர்.
புலிகள் உட்பட வன விலங்குகள், இக்கோவிலின் வளாகத்திற்குள் இதுவரை நுழைந்ததில்லை. அடர்ந்த வனப்பகுதியால் சூழப்பட்டு, அரபிக்கடலை நோக்கியவாறு இக்கோவில் அமைந்து உள்ளது. இங்குள்ள தெய்வத்தை, மிகுந்த பக்தியுடன் வணங்குகின்றனர்.
மலையின் புல்வெளி போன்ற சமதளத்தில் அமைந்து உள்ள இக்கோவிலை சுற்றி மேற்குதொடர்ச்சி மலையின் அழகை காணலாம். கோவில் அருகில் சிறிது துாரம் நடந்து சென்றால், சிவனுக்கு 'ஷம்புலிங்கேஸ்வரர்' சன்னதி கட்டப்பட்டு உள்ளது. அவரையும் தரிசிக்கலாம்.
கோவிலுக்கு செல்ல வாகன வசதி செய்யப்பட்டு உள்ளது. சுற்றுவட்டார பகுதியில் மட்டுமின்றி, மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர். இது ஆன்மிக பகுதியாகவும், சுற்றுலா இடமாகவும் திகழ்கிறது.

