/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கர்நாடக நக்சல் தடுப்பு படை நீட்டிப்பு
/
கர்நாடக நக்சல் தடுப்பு படை நீட்டிப்பு
ADDED : மே 30, 2025 11:11 PM
பெங்களூரு: கர்நாடகாவை நக்சல் இல்லாத மாநிலமாக அறிவித்த நிலையில், சத்தீஸ்கரில் இருந்து, நக்சல்கள் கர்நாடகாவுக்குள் ஊடுருவியதாக தகவல் வெளியானது. எனவே நக்சல் தடுப்பு படையை கலைக்கும் முடிவை, மாநில அரசு திரும்பப் பெற்றுள்ளது.
கர்நாடகாவை நக்சல் இல்லா மாநிலமாக்குவதில், முதல்வர் சித்தராமையா ஆர்வம் காட்டினார். எனவே சரணடைந்தால், நக்சல்களை மன்னிப்பதுடன், மறுவாழ்வுக்கு தேவையான வசதிகளை செய்து தருவதாக அறிவித்தார். இல்லாவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுப்பதாக எச்சரித்தார்.
கர்நாடகா, தமிழகம், கேரளா ஆகிய மாநிலங்களில், நக்சல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஆறு பேர், நடப்பாண்டு ஜனவரியில், முதல்வர் சித்தராமையா முன்னிலையில் சரணடைந்தனர்.
தற்போது இவர்கள் நீதிமன்றத்தில் இருந்தும், வாக்குறுதி அளித்தபடி, இவர்களின் மறுவாழ்வுக்கு தேவையான வசதிகளை செய்ய, அரசு முடிவு செயதுள்ளது.
நடப்பாண்டு பட்ஜெட்டில், கர்நாடகா, நக்சல் இல்லாத மாநிலமானதாக முதல்வர் சித்தராமையா அறிவித்தார். கர்நாடக நக்சல் தடுப்பு படையை கலைக்கவும் முடிவு செய்திருந்தார்.
ஆனால் கர்நாடகாவில் நக்சல்கள் இல்லை என்றாலும், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கை தீவிரமடைந்துள்ளது.
எனவே அம்மாநிலங்களில் செயல்படும் நக்சல்கள், கர்நாடகா, தமிழகம், கேரள எல்லைப்பகுதிகளுக்கு இடம் மாறுகின்றனர் என, மத்திய உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
எனவே நக்சல் தடுப்புப் படையை கலைக்கும் முடிவை, முதல்வர் சித்தராமையா கைவிட்டுள்ளார். அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு நக்சல் தடுப்புப் படையை நீட்டித்துள்ளார்.
இப்படையின் ஊழியர்கள் எண்ணிக்கையை குறைத்துள்ளார். நக்சல் தடுப்புப் படையில் 656 போலீசார் இருந்தனர். இதில் 258 பேரை, மத கலவரத்தை ஏற்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கும் நோக்கில் அரசு அமைத்துள்ள 'செயற்படை'க்கு மாற்றியது. மீதமுள்ள போலீசார், நக்சல் தடுப்புப் படையில் நீட்டிக்கப்பட்டுள்ளனர்.