/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
15ம் தேதிக்கு பின் கர்நாடக அமைச்சரவை மாற்றம்?
/
15ம் தேதிக்கு பின் கர்நாடக அமைச்சரவை மாற்றம்?
ADDED : நவ 04, 2025 04:47 AM
மைசூரு:  ''அமைச்சரவை மாற்றம் குறித்து விவாதிக்க வரும் 15ம் தேதி டில்லி செல்கிறேன். அங்கு ராகுல், கார்கேவுடன் விவாதிப்பேன்,'' என முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
பீஹார் தேர்தலை ஒட்டி, பெங்களூரு ஹெப்பால் பகுதியில் வசித்து வரும் பீஹார் மக்கள் சங்கத்தினரிடம், துணை முதல்வர் சிவகுமார் ஓட்டு சேகரித்தார்.
இது தொடர்பாக, மைசூரில் நேற்று முதல்வர் சித்தராமையா அளித்த பேட்டி:
கர்நாடகாவில் பீஹார் மாநில மக்கள் வசித்து வருகின்றனர். எங்கள் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிக்கும்படி கேட்போம்.
பீஹார் தேர்தலில் பிரசாரம் செய்ய இதுவரை என்னை அழைக்கவில்லை; அழைத்தால் செல்வேன். இம்முறை சட்டசபை தேர்தலில் 'இண்டி' கூட்டணி வெற்றி பெற்று ஆட்சிக்கு வரும். முதல்வர் நிதிஷ் குமாரை பார்த்து, அம்மாநில மக்கள் சலித்து போயுள்ளனர்.
காரணம், அவருக்கு எந்த சித்தாந்தமும் இல்லை. இதனால் இண்டி கூட்டணிக்கு மக்கள் வாக்களிப்பர் என்று நம்புகிறேன்.
பீஹார் தேர்தல் முடிந்த பின், அமைச்சரவை மாற்றம் குறித்து ராகுல், மல்லிகார்ஜுன கார்கேவுடன் விவாதிப்பேன். இதற்காக வரும் 15ம் தேதி டில்லி செல்கிறேன். அமைச்சரவை மாற்றம் குறித்து கட்சி மேலிடம் என்ன கூறுகிறதோ அதன்படி செயல்படுவேன்.
யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை. காங்கிரஸ் மேலிடம் என்ன சொல்கிறது என்பது தான் முக்கியம். முதல்வர் மாற்றம் பற்றி கட்சி தலைமை ஏதாவது கூறியதா. அதையே ஏன் திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். இது பற்றி மக்கள் பேசுவதில்லை. ஊடகத்தினர் தான் பேசுகின்றனர்.
வனப்பகுதிகளில் அதிகளவில் ரிசார்ட்கள் உருவாகி வருகின்றன. மேலும் சபாரி உட்பட மக்கள் போக்குவரத்தும் அதிகரித்து வருகிறது. தண்ணீர், தீவன பற்றாக்குறையால், புலிகள், சிறுத்தைகள் மக்கள் வசிக்கும் பகுதிக்குள் வருகின்றன.
அமைச்சர்கள் ஏற்கனவே விவசாயிகள், வனத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி உள்ளனர். இது தொடர்பாக என் தலைமையிலும் கூட்டம் நடக்கும். சட்ட விரோதமாக ரிசார்ட்கள் நடத்துபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.  சபாரிகளின் எண்ணிக்கையை குறைக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

