தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ கர்நாடக காங்கிரசில் உச்சக்கட்ட குழப்பம் சித்து --- சிவகுமார் இன்று ஆலோசனை

 கர்நாடக காங்கிரசில் உச்சக்கட்ட குழப்பம் சித்து --- சிவகுமார் இன்று ஆலோசனை

 கர்நாடக காங்கிரசில் உச்சக்கட்ட குழப்பம் சித்து --- சிவகுமார் இன்று ஆலோசனை


ADDED : நவ 29, 2025 06:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 29, 2025 06:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: முதல்வர் பதவி குறித்த அதிகார பகிர்வு தொடர்பாக மேலிடத்தின் உத்தரவுப்படி, முதல்வர் சித்தராமையாவும், துணை முதல்வர் சிவகுமாரும் இன்று சந்தித்து பேச்சு நடத்துகின்றனர்.

கர்நாடக காங்கிரஸ் ஆட்சியில் முதல்வர் பதவியை தக்கவைப்பதில் முதல்வர் சித்தராமையா மும்முரமாக உள்ளார். இந்த ஆட்சி முடியும் வரை தானே முதல்வராக இருப்பேன் என்றும் சொல்லி வருகிறார். ஆனால், ஆட்சி அமைய தன் உழைப்பு மிக பெரியது, ஆட்சி அமையும்போது போடப்பட்ட வாய்மொழி ஒப்பந்தப்படி, தனக்கு முதல்வர் பதவியை விட்டுத் தர வேண்டும் என்று துணை முதல்வர் சிவகுமார் வலியுறுத்தி வருகிறார்.

தனி தனி அணி தங்கள் கருத்தில் இருவரும் அடம் பிடித்து வருவது, கர்நாடக காங்கிரஸ் ஆட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு தலைவர்களின் ஆதரவாளர்களும் சமூக வலைதளங்களில் வாக்குவாதத்தில் ஈடுபடு கின்றனர்.

இருவரின் ஆதரவு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், எம்.எல்.சி.,க்கள், ஆதரவாளர்கள் தனி தனி அணியாக செயல்படுவதால், கடந்த ஒரு மாதமாக அரசு இயந்திரம் முடங்கிக் கிடப்பதாக பொது மக்கள் எரிச்சல் அடைந்துள்ளனர். எந்த விதமான மேம்பாட்டுப் பணிகளும் நடக்கவில்லை என்று எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இதற்கிடையில், முதல்வராக சித்தராமையா தொடரவில்லை என்றால், காங்கிரசுக்கு எதிராக செயல்படுவோம் என்று அவர் சார்ந்த குருபர் சமுதாயத்தினர் நேற்று ஆலோசனை நடத்தி தீர்மானித்தனர்.

இன்று முதல்வருக்கு ஆதரவாக மாநிலம் முழுவதும் மாவட்டம் வாரியாக பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி, காங்கிரஸ் மேலிடத்தை வலியுறுத்த உள்ளனர்.

தலைவலி மற்றொரு புறம், துணை முதல்வர் சிவகுமாருக்கு முதல்வர் பதவியை தர வேண்டும் என்று அவர் சார்ந்த ஒக்கலிக சமுதாயத்தினர் வலியுறுத்துகின்றனர். அதிகார பகிர்வு குறித்த இந்த குழப்பம், உச்சகட்டத்தை எட்டியுள்ளதால், காங்கிரஸ் மேலிடத்துக்கு தலைவலி ஏற்பட்டுள்ளது.

நாட்டில் காங்கிரஸ் ஆட்சியில் உள்ள சொற்ப மாநிலங்களில், கர்நாடகா மிக முக்கியமானது. மூத்த தலைவர்களே சண்டை போடுவது ஆட்சிக்கும், கட்சிக்கும் மட்டுமின்றி தொண்டர்களும் வேதனையில் உள்ளனர்.

இதே நிலைமை நீடித்தால், டிசம்பர் 8ம் தேதி துவங்கும் குளிர்கால சட்டசபை கூட்டத்தொடரில், அமளியில் ஈடுபட்டு போராட்டம் நடத்த எதிர்க்கட்சியினர் திட்டமிட்டுள்ளனர். இதனால், உடனடியாக தீர்வு காண வேண்டும் என, மேலிட தலைவர்களிடம் அமைச்சர்களும், தலைவர்களும் முறையிட்டனர்.

இந்நிலையில், பெங்களூரு விதான் சவுதாவில், நேற்று இரவு முதல்வர் சித்தராமையா கூறியதாவது:

கட்சி மேலிட தலைவர்கள், என்னையும் துணை முதல்வரையும் சந்தித்து பேசும்படி, போன் செய்து கூறினர். எனவே நான் அவரை சிற்றுண்டிக்கு வரும்படி அழைத்துள்ளேன். அப்போது இருவரும் ஆலோசனை செய்வோம்.

கட்சி மேலிடம் சொல்படி நடந்து கொள்வதாக சிவகுமார் தெரிவித்துள்ளார். என் முடிவில் எந்த மாற்றமும் இல்லை. கட்சி மேலிடம் சொல்படி நடப்பேன். டில்லிக்கு அழைத்தாலும் செல்வேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆட்சிக்கு சிக்கல்? பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், பெங்களூரு குமார குருபா சாலையில் உள்ள, முதல்வரின் அரசு இல்லமான காவிரியில், முதல்வர், துணை முதல்வர் இன்று காலை 9:30 மணி அளவில் சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்த உள்ளனர்.

டில்லியில் நாளை காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில், முக்கிய ஆலோசனை நடைபெறு உள்ளதாக தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து, முதல்வர் புதிய தகவலை வெளியிட்டார்.

இன்றைய சந்திப்பில் என்ன முடிவு எடுக்கப்படும் என்பதை பொறுத்து நாளை டில்லியில் கூட்டம் நடைபெறுமா இல்லையா என்பது தெரிய வரும்.

இந்த கூட்டத்தில் எந்த முடிவு எடுத்தாலும், ஆட்சிக்கு சிக்கல் ஏற்படுவது உறுதி என்று ஒரு அரசியல் விமர்சகர் தெரிவித்தார்.

இரு தரப்பையும் சமாதானப்படுத்தி, சித்தராமையாவையே முதல்வராக தொடரும்படி கூறுகின்றனரா அல்லது இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட வாய்மொழி ஒப்பந்தப்படி சிவகுமாருக்கு, முதல்வர் பதவியை விட்டுத் தரும்படி, உத்தரவிடுவரா என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

எஸ்.சி., கோட்டா ஒரு வேளை முதல்வர் பதவியை விட்டுத் தரும்படி சித்தராமையாவுக்கு மேலிடம் உத்தரவிடும் பட்சத்தில், எஸ்.சி., கோட்டாவின் கீழ், உள்துறை அமைச்சர் பரமேஸ்வருக்கு அந்த பதவியை தரும்படி கூறி முதல்வர் முரண்டு பிடிப்பார் என்றும் பேசப்படுகிறது.

இந்த ஒட்டு மொத்த அரசியல் குழப்பத்துக்கும் இன்றோ நாளையோ தீர்வு கிடைக்குமா, இல்லை நீடிக்குமா என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

காங்கிரஸ் மேலிட முடிவுக்காக எதிர்க்கட்சிகளான பா.ஜ., - ம.ஜ.த.,வினரும் காத்திருக்கின்றனர்.

நானும் பீ.சி., தான் எனக்கு எதுவும் வேண்டாம். எதற்கும் அவசரப்பட மாட்டேன். பதவி உட்பட அனைத்தையும் கட்சி மேலிடம் பார்த்துக் கொள்ளும். காங்கிரஸ் தான் என் சமுதாயம். அனைத்து சமுதாயத்தையும் சமமாக பார்க்கிறேன். நான் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்துக்கு சொந்தமானவன் அல்ல. நானும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவன் தான். சிவகுமார், துணை முதல்வர்


நேருக்கு நேர் சந்திப்பு

கை கொடுத்த 'ரிமோட்'

அதிகார பகிர்வு குறித்து, சித்தராமையா, சிவகுமார் இடையே குழப்பம் ஏற்பட்டுள்ள வேளையில், இருவரும் நேற்று ஒரே மேடையில் சந்தித்துக் கொண்டனர். பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நடந்த ஒருங்கிணைந்த சிசு வளர்ச்சி திட்டத்தின் பொன் விழாவில் இருவரும் பங்கேற்றனர். முதல்வருக்கு கொடுத்த 'ரிமோட் கன்ட்ரோல்' சரியாக வேலை செய்யாதபோது, தன்னிடம் இருந்த மற்றொரு 'ரிமோட் கன்ட்ரோலை', முதல்வரிடம், துணை முதல்வர் வழங்கினார். என்ன தான் அதிகார பகிர்வு குறித்து, இருவரிடையே கருத்து வேறுபாடு இருந்தாலும், ஐந்து நாட்களில், வெவ்வேறு நிகழ்ச்சிகளில் இருவரும் ஒரே மேடையில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us