/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'ஆப்பரேஷன் சிந்துார்' குறித்து கர்நாடக காங்., அடுத்தடுத்து பல்டி!: அமைதியே சிறந்த ஆயுதம் என 'எக்ஸ்' பக்கத்தில் கருத்து
/
'ஆப்பரேஷன் சிந்துார்' குறித்து கர்நாடக காங்., அடுத்தடுத்து பல்டி!: அமைதியே சிறந்த ஆயுதம் என 'எக்ஸ்' பக்கத்தில் கருத்து
'ஆப்பரேஷன் சிந்துார்' குறித்து கர்நாடக காங்., அடுத்தடுத்து பல்டி!: அமைதியே சிறந்த ஆயுதம் என 'எக்ஸ்' பக்கத்தில் கருத்து
'ஆப்பரேஷன் சிந்துார்' குறித்து கர்நாடக காங்., அடுத்தடுத்து பல்டி!: அமைதியே சிறந்த ஆயுதம் என 'எக்ஸ்' பக்கத்தில் கருத்து
ADDED : மே 07, 2025 11:20 PM

பெங்களூரு: பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக நேற்று அதிகாலை நமது ராணுவம்,'ஆப்பரேஷன் சிந்துாரை' நடத்தியது. இதில், பாகிஸ்தானில் இருந்த ஒன்பது பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன.
இதற்கு, பலரும் வாழ்த்து தெரிவித்து வந்த நிலையில், வழக்கம் போல கர்நாடக காங்கிரஸ் தன் எக்ஸ் பக்கத்தில், 'அமைதியே சிறந்த ஆயுதம்' என, ஆப்பரேஷன் சிந்துாரை விமர்சிக்கும் வகையில் கருத்து தெரிவித்தது.
இதற்கு பலத்த எதிர்ப்புகள் கிளம்பியதால், அந்த பதிவை உடனடியாக நீக்கிவிட்டு, ராணுவத்தை வாழ்த்தி பதிவிட்டது.
சுற்றுலா பயணியர்
ஜம்மு - காஷ்மீர், பஹல்காமில், கடந்த மாதம் 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 26 சுற்றுலா பயணியர் உயிரிழந்தனர். இதையடுத்து, பாகிஸ்தான் மீது இந்தியா எந்நேரத்திலும் போர் தொடுக்கும் என்ற தகவல்கள் வெளியாகின.
இந்த சூழலில், காங்., கட்சியை சேர்ந்த, கர்நாடக முதல்வர் சித்தராமையா, 'பாகிஸ்தான் மீது போர் தொடுக்க வேண்டிய அவசியம் இல்லை' என்றார். இது பாகிஸ்தான் நாட்டில் உள்ள, 'டிவி' சேனலில் முக்கிய செய்தியாக ஒளிபரப்பானது.
இதற்கு பா.ஜ., தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்ததை அடுத்து, சித்தராமையா தன் கருத்தை வாபஸ் பெற்றார்.
இந்நிலையில், நேற்று அதிகாலை 1:00 மணி அளவில், இந்திய விமானங்கள் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள ஒன்பது பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தின. இதற்கு ஆப்பரேஷன் சிந்துார் என பெயரிடப்பட்டது.
இதில், உலக அளவில் தேடப்படும் குற்றவாளியான ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார் வீடு தரைமட்டமானது. அவரது குடும்பத்தினர் 10 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
இச்செய்தி நேற்று காலை இந்திய மக்களுக்கு தெரிய வந்ததும், பலரும் கொண்டாடி தீர்த்தனர். மேலும், நமது ராணுவத்தை பாராட்டி பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்தனர்.
அனைவரும் பாராட்டிய நிலையில், கர்நாடக மாநில காங்கிரஸ் தன் எக்ஸ் பக்கத்தில், நேற்று காலை 7:30 மணிக்கு ஒரு பதிவிட்டு, அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
அவமதிப்பு
அதில், 'உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்த ஆயுதம் அமைதியே' என்ற காந்தியின் பொன்மொழியை பதிவிட்டிருந்தது.
இது, ஆப்பரேஷன் சிந்துாரை அவமதிக்கும் வகையில் இருந்தது. இதற்கு எதிர்க்கட்சிகளான பா.ஜ., - ம.ஜ.த.,வை தாண்டி பொது மக்களே கடும் எதிர்ப்பு தெரிவித்து கருத்துகளை பதிவிட்டனர்.
இந்த விஷயத்தின் தீவிரத்தை புரிந்து கொண்ட, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் உடனடியாக அந்த பதிவை நீக்குமாறு அறிவுறுத்தினர்.
இதையடுத்து, அப்படியே அந்தர்பல்டி அடிக்கும் விதமாக, காந்தியின் பொன் மொழி குறித்த பதிவை நீக்கிவிட்டு, ஆப்பரேஷன் சிந்துாருக்கு வாழ்த்து தெரிவித்து, எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டது.
இதையடுத்து, காங்., தலைவர்கள் பரும் வாழ்த்து தெரிவித்து கருத்துகளை பதிவிட்டனர்.
இவர்களுக்கு எல்லாம் ஒரு படி மேல் சென்று, முதல்வர் சித்தராமையா நெற்றியில் குங்குமம் வைத்து, செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டார்.
அசோக் பாய்ச்சல்
சட்டசபை எதிர்க்கட்சி பா.ஜ., தலைவர் அசோக், காங்கிரஸ் பக்கத்தில் நீக்கப்பட்ட பதிவை, தன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு, அளித்த பேட்டி:
ஆப்பரேஷன் சிந்துாரை பொறுத்தவரை கர்நாடக காங்கிரசின் நிலைப்பாடு மிகவும் மோசமாக உள்ளது. இதுபோன்ற வரலாற்று சிறப்புமிக்க சம்பவத்தை எப்படி விமர்சிக்கின்றனர்.
தேசிய காங்கிரசில் இருந்து கர்நாடக காங்கிரஸ் வேறுபட்டு உள்ளது. பாகிஸ்தானுடன் போர் நடந்தால், சிறுபான்மையினரின் வாக்குகளை இழந்து விடுவோமா என முதல்வர் சித்தராமையா பயப்படுகிறார்.
அதனாலே, போர் குறித்தும், ஆப்பரேஷன் சிந்துார் குறித்தும் மாறி மாறி கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
அனைத்து மாநிலங்களிலும், பாகிஸ்தானியர்கள் வெளியேற்றப்படுகின்றனர். ஆனால், கர்நாடகாவில் மட்டும் ஏன் இதுவரை வெளியேற்றப்படவில்லை.
அமைச்சர் ஜமீர் அகமது கான் பாகிஸ்தானுக்கு மனித வெடிகுண்டாக செல்ல தேவையில்லை. அவர், முதலில் நம் நாட்டிற்குள் இருக்கும் ஸ்லீப்பர் செல்களை தாக்கட்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.