/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கர்நாடக யானைகள் ஜப்பானில் உற்சாகம்
/
கர்நாடக யானைகள் ஜப்பானில் உற்சாகம்
ADDED : ஆக 19, 2025 02:26 AM

பெங்களூரு : பன்னரகட்டா உயிரியல் பூங்காவில் இருந்து, ஜப்பானுக்கு சென்ற நான்கு யானைகள், அங்குள்ள சூழ்நிலைக்கு ஏற்ப மாறியுள்ளன. மகிழ்ச்சியோடு விளையாடுகின்றன.
சர்வதேச அளவிலான, விலங்குகள் பரிமாற்றம் ஒப்பந்தப்படி, கர்நாடகாவில் இருந்து, நான்கு வளர்ப்பு யானைகள் ஜப்பானுக்கு அனுப்ப முடிவானது.
பெங்களூரு ரூரல் மாவட்டம், ஆனேக்கல் தாலுகாவின், பன்னரகட்டா உயிரியல் பூங்காவில் இருந்து, ஜூலை 24ம் தேதியன்று, சுரேஷ், துளசி, கவுரி, ஸ்ருதி என்ற நான்கு யானைகள் சிறப்பு விமானம் மூலமாக, ஜப்பானுக்கு அனுப்பப்பட்டன.
யானைகளுடன் பாகன்கள், கால்நடை டாக்டர்கள், விலங்குகள் வல்லுநர்கள் சென்றிருந்தனர். ஜப்பானின் ஹிமேஜி சென்ட்ரல் பார்க்கில் யானைகள் உள்ளன. எட்டு பேர் கொண்ட குழுவினர் இரண்டு வாரங்கள் உடன் தங்கியிருந்தனர். புதிய சூழலுக்கு எப்படி பழகுவது, எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து, சிறு குழந்தைகளுக்கு புத்திமதி கூறுவது போன்று, யானைகளுக்கு பயிற்சி அளித்தனர்.
அதேபோன்று, யானைகளை எப்படி பராமரிப்பது, நடந்து கொள்வது என்ற ஜப்பானின் பூங்கா ஊழியர்களுக்கு பயிற்சி அளித்தனர். யானைகளும் விரைவில் புதிய சூழலுக்கு பழகியுள்ளன. ஆரம்பத்தில் யானைகள் தனிமையில் தங்க வைக்கப்பட்டன. புதிய சூழலுக்கு பழக்கமானதாலும், யானைகளின் ஆரோக்கியம் நன்றாக இருப்பதாலும், மற்ற யானைகளுடன் விட்டுள்ளனர்.
ஹிமேஜி சென்ட்ரல் பார்க்கில், விநாயகருக்கு பூஜை செய்து, யானைகள் முகாம் திறந்து வைக்கப்பட்டது. ஆகஸ்ட் 9ம் தேதி முதல், பொது மக்களின் பார்வைக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
யானைகள் மிகவும் மகிழ்ச்சியாக பொழுது போக்குகின்றன. பாகன்கள் மிகவும் கனத்த மனதுடன், யானைகளிடம் பிரியாவிடை பெற்று, பெங்களூருக்கு திரும்பினர்.
யானை பாகன் கார்த்திக் கூறியதாவது:
பெங்களூரில் இருந்து புறப்படும் போது, கண்ணீருடன் ஜப்பானுக்கு சென்ற யானைகள், அங்குள்ள புதிய இடம், புதிய சூழ்நிலை மகிழ்ச்சி அளித்துள்ளது.
யானைகளுக்கு கரும்பு கொடுத்து, உங்களை விட்டு பிரிகிறோம் என, கூறினோம். யானைகள் மகிழ்ச்சியோடு விளையாடுவதை கண்டு, எங்களுக்கும் மகிழ்ச்சி ஏற்பட்டது.
ஜப்பானின் ஹிமேஜி சென்ட்ரல் பார்க் ஊழியர்களுக்கு, யானைகளுக்கான வெல்லம், பழம், புல் கலந்த உருண்டைகளை தயாரிப்பது குறித்து கற்று தந்தோம்.
அவர்களும் அதே போன்று தயாரித்து, யானைகளுக்கு கொடுத்தனர். அவைகளும் விரும்பி தின்றன. அந்த சுவைக்கு பழகின.
எங்கள் யானைகளை நன்றாக பார்த்து கொள்ளுங்கள் என, கூறிவிட்டு ஜப்பானில் இருந்து புறப்படும் போது, எங்களால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.