/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கர்நாடக மாம்பழங்கள் 92 லட்சம் கிலோ ஏற்றுமதி
/
கர்நாடக மாம்பழங்கள் 92 லட்சம் கிலோ ஏற்றுமதி
ADDED : ஆக 15, 2025 11:09 PM

பெங்களூரு: கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்திலிருந்து விமானம் மூலமாக பல நாடுகளுக்கு கர்நாடகாவில் அறுவடை செய்யப்பட்ட 92 லட்சம் கிலோ அளவிலான, 31.50 லட்சம் மாம்பழங்கள் இந்த ஆண்டில் மட்டும் ஏற்றுமதி செய்யப்பட்டன.
கர்நாடகாவில் பயிரிடப்படும் அல்போன்சா, ரஸ்புரி, தோத்தாபுரி, கேசர் உள்ளிட்ட மாம்பழங்கள் உலக அளவில் பிரசித்தி பெற்றவை. இந்த மாம்பழங்கள் பல நாடுகளின் நகரங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுவது வழக்கம். அவ்வகையில், நடப்பாண்டில் அறுவடை செய்யப்பட்ட மாம்பழங்களும், விமானம் வழியாக ஏற்றுமதி செய்யப்பட்டன.
அமெரிக்கா கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையம் மூலம் 92 லட்சம் கிலோ அளவிலான 31.50 லட்சம் மாம்பழங்கள், பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. பெங்களூரில் இருந்து 51 சர்வதேச விமான நிலையங்களுக்கு, 24 ஏர்லைன்ஸ் விமானங்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டன. புதிதாக 19 நகரங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.
இவற்றில் அமெரிக்காவின் சிகாகோ, சான் பிரான்சிஸ்கோ உள்ளிட்ட நகரங்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து, கெம்பே கவுடா விமான நிலைய தலைமை இயக்க அதிகாரி சத்யகி ரகுநாத் கூறியதாவது:
கர்நாடகாவின் மாம்பழ விவசாயிகளின் தோட்டத்தில் விளைவிக்கப்பட்ட மாம்பழங்கள் பல வெளிநாடுகளில் உள்ள சந்தைகள், வணிக வளாகங்கள், மார்க்கெட்டுகளில் விற்கப்படுகின்றன. இதை நினைத்து விவசாயிகளும் பெருமை கொள்கின்றனர்.
இது வெறும் மாம்பழ ஏற்றுமதி சம்பந்தப்பட்ட விஷயம் மட்டும் கிடையாது. மாறாக, கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையம் பொருட்களை ஏற்றுமதி செய்வதில், நாட்டில் உள்ள மற்ற சர்வதேச விமான நிலையங்களை விட முந்திச் செல்வதை காட்டுகிறது.
கடந்த நிதியாண்டில் மட்டும் பழம், காய்கறி, உணவு பொருட்கள் என, 50 கோடி கிலோவுக்கும் மேற்பட்ட பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.