/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'அன்னபாக்யா' அரிசியை வெளிநாடுகளுக்கு கடத்த முயற்சி :கர்நாடக உணவுத்துறை அதிகாரிகள் கண்டுபிடிப்பு
/
'அன்னபாக்யா' அரிசியை வெளிநாடுகளுக்கு கடத்த முயற்சி :கர்நாடக உணவுத்துறை அதிகாரிகள் கண்டுபிடிப்பு
'அன்னபாக்யா' அரிசியை வெளிநாடுகளுக்கு கடத்த முயற்சி :கர்நாடக உணவுத்துறை அதிகாரிகள் கண்டுபிடிப்பு
'அன்னபாக்யா' அரிசியை வெளிநாடுகளுக்கு கடத்த முயற்சி :கர்நாடக உணவுத்துறை அதிகாரிகள் கண்டுபிடிப்பு
ADDED : செப் 09, 2025 05:06 AM
பெங்களூரு: வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள, பி.பி.எல்., குடும்பத்தினருக்கு, நியாய விலை கடைகள் மூலம், 'அன்னபாக்யா' திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அரிசி, சிங்கப்பூர், பிரான்ஸ், துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்தப்படுவதை, உணவுத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
கர்நாடகாவில் பி.பி.எல்., ரேஷன் கார்டுதாரர்களுக்கு, 'அன்னபாக்யா' திட்டத்தின் கீழ், இலவச அரிசி வழங்கப்படுகிறது. ஆனால் இந்த அரிசி, பயனாளிகளுக்கு கிடைப்பதற்கு பதிலாக, தனியார் நபர்களுக்கு எளிதில் கிடைக்கிறது.
நியாய விலை கடைகளில் 'அன்னபாக்யா' அரிசியை, குறைந்த விலைக்கு வாங்கும் வியாபாரிகள், அதை பாலீஷ் செய்து உயர்தரமாக்கி, வெளி சந்தையில் அதிக விலைக்கு விற்கின்றனர்.
சில இடங்களில் பயனாளிகளே, தங்களின் பயன்பாட்டுக்கு போக, மீதமாகும் அரிசியை அரிசி மில்களுக்கு விற்பதும், ஆங்காங்கே நடக்கிறது. இதுவரை வெளி மாநிலங்களுக்கு விற்கப்பட்ட ரேஷன் அரிசி, தற்போது வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதை, உணவுத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
சில நாட்களுக்கு முன், உத்தரகன்னடா மாவட்டத்தின் சிர்சி, கொப்பால் மாவட்டத்தின் கங்காவதி, ஹாசனின், அரகலகூடில், ரேஷன் அரிசி கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. துபாய் முகவரி கொண்ட பைகளில் அரிசியை நிரப்பியதை கைப்பற்றினர்.
செப்டம்பர் 5ம் தேதி இரவு, யாத்கிர் மாவட்டம், குருமிட்கலில் உள்ள, லட்சுமி வெங்கடேஸ்வரா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில், உணவுத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அங்கு பதுக்கப்பட்ட 6,000 முதல் 7,000 குவின்டால் அரிசி கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு 6 கோடி ரூபாய்.
பதுக்கப்பட்ட இந்த அரிசியை, சிங்கப்பூர், துபாய், பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு கடத்த ஏற்பாடு நடந்தது, விசாரணையில் தெரியவந்தது. இதுதொடர்பாக, சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில், உணவுத்துறை அதிகாரிகள் நேற்று புகார் அளித்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, உணவுத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
யாத்கிர் மாவட்டத்தின், பல்வேறு இடங்களில் ரேஷன் அரிசியை சேகரித்து, லட்சுமி வெங்டேஸ்வரா எண்டர்பிரைசஸ் ஆலைக்கு கொண்டு வந்து, அதிநவீன இயந்திரங்களில் போட்டு, பாலீஷ் செய்கின்றனர். இவ்வாறு பாலீஷ் போடப்பட்ட அரிசியை, 25 கிலோ, 10 கிலோ பைகளில் நிரப்பி, 'டைனஸ்டி, வோல்கா ஏஏஏ, தாரா டபிள் ஸ்டார்' என, பல பிராண்ட்களின் பெயரில், சிங்கப்பூர், பிரான்ஸ் மற்றும் அரபு நாடுகளுக்கு கடத்த, ஏற்பாடு செய்தனர்.
அரிசி பைகளின் மீது, அந்தந்த நாடுகளின் மொழிகளில் பிரின்ட் செய்துள்ளனர். சிங்கப்பூரில் 25 கிலோ கொண்ட அரிசி மூட்டைக்கு 8,000 முதல் 10,000 ரூபாய், அரபு நாடுகளுக்கு 10 கிலோ கொண்ட அரிசி மூட்டைகள், 1,500 முதல் 2,000 ரூபாய்க்கு விற்க, தயாராகியுள்ளனர்.
இதுதொடர்பாக, எதிர்க்கட்சி தலைவர் அசோக், 'எக்ஸ்' வலைதளத்தில் வெளியிட்ட பதிவு:
'அன்னபாக்யா' திட்டத்தின் கீழ், பி.பி.எல்., குடும்பங்களுக்கு வழங்கும் அரிசியிலும் ஊழல் நடக்கிறது. இது வெட்கம் கெட்ட அரசு. ஏழைகளுக்கு கிடைக்க வேண்டிய அரிசியை, துபாய், சிங்கப்பூர், பிரான்ஸ் நாடுகளுக்கு கடத்துவதை கண்டு, அதிர்ச்சி அடைந்தேன். அரசில் எந்த அளவுக்கு ஊழல் நடக்கிறது என்பதற்கு, இதுவே உதாரணம்.
முதல்வர் உட்பட, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் என, அனைவரும் ஊழலில் மூழ்கியுள்ளனர். கள்ளச்சந்தையில் அரிசி விற்போருக்கு, பயம் இல்லாமல் போய்விட்டது. இவர்களுக்கு சட்டத்தை பற்றிய பயமும் இல்லை.
இதே காரணத்தால், முதல்வரின் நிதி ஆலோசகர் பசவராஜ் ராயரெட்டி, காங்கிரஸ் நிர்வாகத்தில், கர்நாடகா ஊழலில் 'நம்பர் ஒன்' என, 'சர்ட்டிபிகேட்' கொடுத்தார்.
இவ்வாறு அவர் கூறினார்.