மலையேற்றத்திற்கு கட்டுப்பாடுகள் கர்நாடக வனத்துறை அதிரடி
மலையேற்றத்திற்கு கட்டுப்பாடுகள் கர்நாடக வனத்துறை அதிரடி
ADDED : செப் 01, 2026 03:19 AM
பெங்களூரு: மலையேற்றத்தின் போது நடக்கும் அசம்பாவிதங்களை தவிர்க்க, மலையேறுவோருக்கு கடும் கட்டுப்பாடுகளை, மாநில வனத்துறை விதித்துள்ளது.
கர்நாடகாவில் மலையேற்றத்தின் போது நடக்கும் அசம்பாவிதங்களை தவிர்க்க, மாநில வனத்துறை புதிய வழிகாட்டு நெறிமுறைகளை விதித்துள்ளது.
இது குறித்து, வனத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை:
ஒவ்வொரு மலையேற்ற பாதையும் வனத்துறை அதிகாரிகளால் கண்காணிக்கப்படும். குறிப்பிட்ட பாதையில், ஒரு நாளைக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே மலையேற அனுமதிக்கப்படுவர்.
இதன் மூலம் கூட்ட நெரிசலை தவிர்க்கலாம். மலையேற்றம் செல்பவர்களுடன் அங்கீகரிக்கப்பட்ட வழிகாட்டி, கட்டாயம் இருக்க வேண்டும்; இல்லையென்றால் அனுமதி கிடையாது.
மொபைல் போன் சிக்னல் கிடைக்காத பகுதிகளில் மலையேறுவோருடன் செல்லும் வழிகாட்டியிடம் ஜி.பி.எஸ்., கருவி கொடுக்கப்படும்.
மலையேறும் பாதைகளில் திசை காட்டிகள், ஓய்விடங்கள், மலையின் அடிவாரத்தில் அடிப்படை வசதிகளை அமைப்பது உள்ளிட்ட திட்டம் அமல்படுத்தப்படும்.
வனவிலங்குகள் அதிகமுள்ள பகுதிகளில் மலையேற்றம் தடுத்து நிறுத்தப்படும்.
இந்த விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், அவர்களின் பெயர்கள் கருப்பு பட்டியலில் சேர்க்கப்படும். இப்பட்டியலில் இடம்பெற்றோர் வரும்காலத்தில் மலையேற்றம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
