/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
3 ஆண்டில் நவீன கிரிக்கெட் ஸ்டேடியம் கர்நாடக அரசின் 'ஹவுசிங் போர்டு' திட்டம்
/
3 ஆண்டில் நவீன கிரிக்கெட் ஸ்டேடியம் கர்நாடக அரசின் 'ஹவுசிங் போர்டு' திட்டம்
3 ஆண்டில் நவீன கிரிக்கெட் ஸ்டேடியம் கர்நாடக அரசின் 'ஹவுசிங் போர்டு' திட்டம்
3 ஆண்டில் நவீன கிரிக்கெட் ஸ்டேடியம் கர்நாடக அரசின் 'ஹவுசிங் போர்டு' திட்டம்
ADDED : செப் 18, 2025 11:02 PM

பெங்களூரின் சூர்ய நகரின், நான்காவது ஸ்டேஜில் 80,000 இருக்கைகள் திறன் கொண்ட, சர்வதேச தரம் வாய்ந்த கிரிக்கெட் ஸ்டேடியம் மற்றும் விளையாட்டு வளாகம் கட்ட, கர்நாடக ஹவுசிங் போர்டு முடிவு செய்துள்ளது.
திட்டமிட்டபடி அனைத்தும் நடந்தால், அடுத்த மூன்று ஆண்டுகளில், பணிகள் முடிவடையும். பெங்களூரின், சின்னசாமி விளையாட்டு அரங்கில், நடப்பாண்டு ஜூனில் ஆர்.சி.பி., வெற்றி விழா கொண்டாட்டம் நடந்த போது, கூட்ட நெரிசல் ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்தனர். இதன் விளைவாக, சர்வதேச அளவில், பெங்களூருக்கு அவப்பெயர் ஏற்பட்டது.
இந்த சம்பவத்துக்கு பின், விழித்து கொண்ட மாநில அரசு, சின்னசாமி விளையாட்டு அரங்கம் மீதான அழுத்தத்தை குறைக்க, பெங்களூரின் வெளிப்பகுதியில், உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு அரங்கம் கட்ட ஆர்வம் காட்டுகிறது.
கர்நாடக ஹவுசிங் போர்டு, பெங்களூரின், சூர்யநகரில் உள்ள, தனக்கு சொந்தமான 75 ஏக்கர் பரப்பளவில் 50,000 இருக்கைகள் திறன் கொண்ட விளையாட்டு அரங்கம் கட்ட முடிவு செய்திருந்தது. ஆனால் முதல்வர் சித்தராமையா, கூடுதலாக 25 ஏக்கர் இடத்தை கையகப்படுத்தி, விளையாட்டு அரங்கின் இருக்கைகள் திறனை, 80,000 ஆக அதிகரிக்கும்படி உத்தரவிட்டுள்ளார். இதன்படி ஹவுசிங் போர்டு தயாராகிறது.
இது குறித்து, கர்நாடக ஹவுசிங் போர்டு அதிகாரிகள் கூறியதாவது:
பெங்களூரு உலகத்தரம் வாய்ந்த நகராகும். கிரிக்கெட்டை காண அதிக எண்ணிக்கையில் ரசிகர்கள் வருகின்றனர்.
ஆலோசனை இதை மனதில் கொண்டு, புதிய விளையாட்டு அரங்கில், இருக்கைகள் எண்ணிக்கையை 50,000லிருந்து 80,000 ஆக அதிகரிப்பது நல்லது என, சமீபத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், கருத்துகள் வெளியாகின. இதன்படி விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து, அரசிடம் தாக்கல் செய்து, ஒப்புதல் பெற ஹவுசிங் போர்டு தயாராகிறது.
விளையாட்டு அரங்கத்தை கட்டி முடிக்கும் பொறுப்பை, ஹவுசிங் போர்டே ஏற்றுள்ளது. திட்டத்துக்கு 2,000 கோடி ரூபாய் செலவாகும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த செலவை ஹவுசிங் போர்டு ஏற்கும். விளையாட்டு அரங்கம் கட்டிய பின், இதில் இருந்து கிடைக்கும் வருவாய், ஹவுசிங் போர்டுக்கு செல்லும்.
ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி விளையாட்டு அரங்கம், இந்தியாவில் மிகப்பெரிய விளையாட்டு அரங்கமாகும். இது 1,10,000 இருக்கைகள் திறன் கொண்டதாகும்.
பெங்களூரின் சூர்யநகரில் கட்டும் அரங்கம், இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய கிரிக்கெட் விளையாட்டு அரங்கமாக இருக்கும். சின்னசாமி மைதானம் 36,000 இருக்கைகள் திறன் கொண்டதாகும்.
விளையாட்டு அரங்கம் கட்டுவது குறித்து, இந்திய விளையாட்டுஆணையம், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு ஆணையத்துடன் பேச்சு நடத்தி, ஆலோசனை பெறப்படும். வரும் நாட்களில், எந்த தொந்தரவும் ஏற்படக்கூடாது. எனவே அனைவரிடமும் ஆலோசனை பெற்ற பின்னரே, திட்டத்துக்கு இறுதி வடிவம் கொடுப்போம்.
சூர்ய நகரில் கட்டப்படும் கிரிக்கெட் விளையாட்டு அரங்கம், மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் இருந்து, 47 கி.மீ., கெம்பே கவுடா சர்வதேச நிலையத்தில் இருந்து, 72.2 கி.மீ., ஆனேக்கல் ரயில் நிலையத்தில் இருந்து 11.2 கி.மீ., பொம்மசந்திரா மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து, 18.4 கி.மீ., தொலைவில் இருக்கும்.
மருத்துவ மையம் புதிய விளையாட்டு அரங்கில், கிரிக்கெட், ஹாக்கி, அத்லெட்டிக்ஸ், டென்னிஸ், பாஸ்கட் பால், பேட்மின்டன், வாலிபால், டேபில் டென்னிஸ், ஜூடோ, கபடி, கோகோ உட்பட, உள் மற்றும் வெளி விளையாட்டு அரங்கம் இருக்கும்.
விளையாட்டு வீரர்களின் வசதிக்காக மருத்துவ மையம், விளையாட்டு அறிவியல் கூடம், பிட்னஸ் சென்டர், பிசியோதெரபி மையம், ஹைட்ரோ தெரபி, நீச்சல் குளம், ரெஸ்டாரென்ட், கண்காட்சி மையம், விளையாட்டு சாதனங்கள் விற்பனை கடைகள், மாநாடு ஹால், ஓய்வறை என, அனைத்தும் இருக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -