அரசு நிர்வகிக்கும் கோவில்களில் நன்கொடை வழிமுறைகளை வெளியிட்டது கர்நாடக அரசு
அரசு நிர்வகிக்கும் கோவில்களில் நன்கொடை வழிமுறைகளை வெளியிட்டது கர்நாடக அரசு
ADDED : ஜூலை 14, 2026 09:27 PM
பெங்களூரு: அரசு நிர்வகிக்கும் கோவில்களில் பெறப்படும் நன்கொடைகளின் பாதுகாப்பு, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புடைமையை உறுதி செய்வதை நோக்கமாக கொண்ட நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை கர்நாடக அரசு வெளியிட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் பெறப்படும் காணிக்கை மற்றும் நன்கொடையில் முறைகேடு நடந்த சம்பவம் நாடு முழுதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில், கர்நாடக அறநிலையத் துறை தங்கள் கட்டுப்பாட்டில் வரும் ஹிந்து கோவில்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.
அதில், நன்கொடைகளை கையாள்வது தொடர்பான பல நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை தெரிவித்து உள்ளது. அதன் விபரம்:
கோவிலின் அசையும் மற்றும் அசையா சொத்துகளை பாதுகாக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நிர்வாக அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.
பொதுமக்களுக்கு தெளிவாக தெரியும் பொருத்தமான இடங்களில் மட்டுமே உண்டியல் வைக்கப்பட வேண்டும்.
உண்டியல்களை நான்கு திசைகளில் இருந்தும் கண்காணிக்கும் வகையில் 'சிசிடிவி' கேமரா அல்லது இணையதள கேமரா நிறுவப்பட வேண்டும்.
பதிவாகும் காட்சிகள், மாவட்ட கலெக்டர் மற்றும் துணை மண்டல அதிகாரிகள் வாயிலாக கண்காணிக்கப்பட வேண்டும்.
பதிவாகும் காட்சிகள் பாதுகாப்பான, 'சர்வர்' வாயிலாக சேமிக்கப்பட வேண்டும்.
டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், உண்டியலுக்கு அருகே நன்கொ டை பெறுவதற்கான 'க்யூ.ஆர்.,' குறியீடு வைக்கப்பட வேண்டும். அதில், நன்கொடை பெறும் வங்கி விபரங்கள் இடம்பெற்றிருக்க வேண்டும்.
டிஜிட்டல் கட்டண முறை, கோவில் கணக்குடன் இணைக்கப்பட வேண்டும்.
அதிகளவிலான நன்கொடை மற்றும் காணி க்கை பெறப்படும் கோவில்களில், வாரந்தோறும் உண்டியல் எண்ணும் பணி மேற்கொள்ளப்பட வேண்டும்.
பிற கோவில்களில், இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை உண்டியல் எண்ணப்பட வேண்டும். தாசில்தார் மேற்பார்வையில் இந்த பணி நடத்தப்பட வேண்டும்.
எண்ணும் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளை உறுதி செய்ய முக அங்கீகார முறை அமைப்பு செயல்படுத்தப்பட வேண்டும்.
உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்படுவதை, வீடியோவில் பதிவு செய்ய வேண்டும். இந்த பணியின்போது, ஏதாவது திருட்டு நடந்தால் கோவில் நிர்வாகிகள் பொறுப்பேற்க வேண்டும்.
வருவாய் துறை அதிகாரிகள், போலீசார், அறநிலையத் துறை அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், 15 நாட்களுக்கு ஒருமுறை கோவிலில் ஆய்வு செய்ய வேண்டும்.
விதிமுறைகள் பின்பற்றப்படுவது மற்றும் ஆய்வுகள் குறித்த ஒருங்கிணைந்த மாதாந்திர அறிக்கையை அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
