'கிக்' தொழிலாளர்களுக்கான டிஜிட்டல் குறைதீர் அமைப்பு கர்நாடக அரசு அறிமுகம்
'கிக்' தொழிலாளர்களுக்கான டிஜிட்டல் குறைதீர் அமைப்பு கர்நாடக அரசு அறிமுகம்
ADDED : மே 03, 2026 02:04 AM
பெங்களூரு: செயலிகள் வாயிலாக கிடைக்கும் பகுதி நேர வேலைகளை செய்யும் 'கிக்'தொழிலாளர்களுக்காக, டிஜிட்டல் வாயிலாக குறை தீர்க்கும் அமைப்பை கர்நாடக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த டிஜிட்டல் குறை தீர் மையம் குறித்து அரசு தெரிவித்துள்ளதாவது:
'கிக்' தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாக்கும் நோக்கில், இந்த டிஜிட்டல் குறைதீர் முறை செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. 'கிக்'தொழிலாளர் வாரியம், மின்னணு ஆட்சி துறை இணைந்து இதை உருவாக்கியுள்ளன.
மையப்படுத்தப்பட்ட இந்த போர்ட்டலில் தொழிலாளர்கள் ஊதியம், வேலை நிலை, பணியிடத்தில் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து பதிவு செய்யலாம். ஒவ்வொரு நிறுவனமும், 'உள் தகராறு தீர்க்கும் குழுவை' அமைக்கும். 'நம்ம யாத்ரி', 'யூலு' போன்ற நிறுவனங்கள் ஏற்கனவே இதில் இணைந்துள்ளன; அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களும் இணைய உள்ளன.
போர்ட்டலில் பதிவாகும் புகார்கள் தானாகவே அந்தந்த நிறுவனங்களின் குழுவுக்கு அனுப்பப்படும். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் புகார்கள் தீர்க்கப்படுவதை அரசு கண்காணிக்கும்.
டிரைவர், பிளம்பர், எலெக்ட்ரீசியன், அழகுகலை நிபுணர், பெயின்டர், உணவு, பொருட்கள் டெலிவரி, கம்ப்யூட்டர் டிசைனிங் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடும் 12 லட்சம் தொழிலாளர்களின் விவரங்கள் நிறுவனங்களால் பகிரப்பட்டுள்ளன.
ஒவ்வொரு தொழிலாளிக்கும் தனித்துவமான அடையாள எண் வழங்கப்படும். தொழிலாளர்களின் பணி நேரம், பணியின் தன்மைக்கு ஏற்ப, நலத்திட்டங்களை உருவாக்க நிபுணர்களுடன் ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த திட்டத்தின் வாயிலாக தொழிலாளர்களுக்கு சட்டப்பூர்வ பாதுகாப்பு கிடைக்கிறது.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
