/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
எம்.எல்.ஏ., சிபாரிசுபடி அதிகாரிகள் இடமாற்றம் தவறு அல்ல என கர்நாடக ஐகோர்ட் கருத்து
/
எம்.எல்.ஏ., சிபாரிசுபடி அதிகாரிகள் இடமாற்றம் தவறு அல்ல என கர்நாடக ஐகோர்ட் கருத்து
எம்.எல்.ஏ., சிபாரிசுபடி அதிகாரிகள் இடமாற்றம் தவறு அல்ல என கர்நாடக ஐகோர்ட் கருத்து
எம்.எல்.ஏ., சிபாரிசுபடி அதிகாரிகள் இடமாற்றம் தவறு அல்ல என கர்நாடக ஐகோர்ட் கருத்து
ADDED : ஆக 30, 2025 03:34 AM
பெங்களூரு: 'எம்.எல்.ஏ., சிபாரிசுபடி, அதிகாரிகளை இடமாற்றுவது தவறு அல்ல' என, கர்நாடக உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் பங்கார்பேட்டை தாசில்தாருக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
கோலார் மாவட்டம், பங்கார்பேட்டை தாலுகாவில் தாசில்தார் வெங்கடேசப்பா, 2024 ஜூலை 31 முதல் பணியாற்றி வருகிறார். அவர் அலுவலகத்துக்கு சரியாக வருவது இல்லை. பொது மக்களின் பிரச்னைகளை கேட்டறிந்து, தீர்வு காண்பது இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. தாசில்தாரை இடம் மாற்றும்படி, பங்கார்பேட்டை காங்கிரஸ் எம்.எல்.ஏ., நாராயணசாமி, வருவாய் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதி வேண்டுகோள் விடுத்தார்.
இதன்படி, வெங்கடேசப்பாவை இடம் மாற்றி, 2024 டிசம்பர் 13ல் அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து, கர்நாடக நிர்வாக தீர்ப்பாயத்தில் அவர் முறையிட்டார். விசாரித்த தீர்ப்பாயம், அரசின் இடமாற்ற உத்தரவை உறுதி செய்து, அவரது மனுவை தள்ளுபடி செய்தது.
இதை தொடர்ந்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வெங்கடேசப்பா மேல்முறையீடு செய்தார். இம்மனு நீதிபதிகள் பண்டித் மற்றும் அரவிந்த் முன்னிலையில், நேற்று விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், 'எந்த அதிகாரியாக இருந்தாலும், பதவியேற்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இடமாற்றம் செய்ய கூடாது என்பது விதிமுறை. ஆனால் மனுதாரர் பதவியேற்று, ஆறு மாதங்களுக்குள் இடமாற்றப்பட்டு உள்ளார். இது விதிமீறலாகும். எம்.எல்.ஏ.,வின் வேண்டுகோளின்படி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த இடமாற்றத்தில், பொது நலன் இருப்பதாக கருத முடியாது. எனவே இடமாற்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும்' என வாதிட்டார்.
அரசு தரப்பில் வாதிட்ட வக்கீல், 'விதிகளின்படி இடமாற்றத்துக்கு, முதல்வரிடம் அனுமதி பெறப்பட்டது. மனுதாரர் மீது பொது மக்கள் புகார் அளித்ததால், அவர் இடமாற்றப்பட்டார்' என வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள், 'அத்தியாவசியமான நேரத்தில், எம்.எல்.ஏ., சிபாரிசுபடி, முதல்வரின் ஒப்புதலுடன், இடமாற்றம் செய்ய விதிகளில் இடம் உள்ளது. இந்த இடமற்றத்தை ரத்து செய்ய முடியாது' என தீர்ப்பளித்து, தாசில்தார் வெங்கடேசப்பா மனுவை தள்ளுபடி செய்தனர்.