காலநிலை மாற்றத்துக்கு எதிரான நடவடிக்கை இந்தியாவுக்கு வழிகாட்டியாகும் கர்நாடகா
காலநிலை மாற்றத்துக்கு எதிரான நடவடிக்கை இந்தியாவுக்கு வழிகாட்டியாகும் கர்நாடகா
ADDED : மே 17, 2026 11:26 PM
பெங்களூரு: காலநிலை மாற்றத்துக்கு எதிரான போராட்டத்தில் பிற மாநிலங்களுக்கு வழிகாட்டியாக திகழும் வகையில் கர்நாடகா குறிப்பிடத்தக்க நடவடிக்கையை எடுத்துள்ளது.
மனித நடவடிக்கையால் வளிமண்டலத்தில் உமிழப்படும் கார்பனால் பூமியில் வெப்பநிலை அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க 2070ம் ஆண்டுக்குள் பூஜ்ய கார்பன் உமிழ்வு நாடாக இந்தியாவை மாற்ற மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது.
சாதனை அந்த வகையில், மரபுசாரா எரிசக்தி உற்பத்தியில் 2030க்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த இலக்கை ஐந்து ஆண்டுகளுக்கு முன்னதாகவே நம் நாடு எட்டியது. கார்பன் உமிழ்வு இலக்கிலும் குறிப்பிடத்தக்க சாதனையை இந்தியா நிகழ்த்தியுள்ளது. காலநிலை மாற்றத்துக்கு எதிரான நாட்டின் போராட்டத்தில் கர்நாடகாவின் பங்கு மகத்தானது. மாநிலத்தின் வேளாண்மை, தோட்டக்கலை, கால்நடை பராமரிப்பு, மீன்வளம், வனத்துறை, நீர்வளம், கிராமப்புற மேம்பாடு, நகர்ப்புற மேம்பாடு, எரிசக்தி, போக்குவரத்து, சுகாதாரம், வருவாய்த்துறை (பேரிடர் மேலாண்மை), சிறு மற்றும் குறு தொழில்கள், கல்வி, சுற்றுலா ஆகிய 15 துறைகளுக்கு 105 காலநிலை இலக்குகளை மாநில அரசு நிர்ணயித்தது.
இந்த இலக்குகளை சம்பந்தப்பட்ட துறைகள் தினமும் கண்காணிக்க பிரத்யேக இணையதளங்கள் உருவாக்கப்பட்டு, புள்ளி விபரங்கள் பதிவேற்றப்பட்டன. களப்பணிகளும் கண்காணிக்கப்பட்டன.
காலநிலை செயல் அடுத்தகட்டமாக மாநிலத்தில் உள்ள 5,994 கிராமப் பஞ்சாயத்துக்கள், 340 நகர்ப்புற உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு தனித்தனியான காலநிலை செயல் திட்டங்களை மாநில அரசு வகுத்து வருகிறது.
இது வெற்றி பெற்றால், அடிமட்ட அளவில் காலநிலை மாற்றத்துக்கென நடவடிக்கையை உள்ளாட்சிகள் மட்டத்தில் பொறுப்புகளை சுமத்திய முதல் மாநிலமாக கர்நாடகா திகழும். மேலும், நாட்டின் 2.5 லட்சம் கிராமங்களுக்கு வழிகாட்டியாக கர்நாடகா உருவெடுக்கும். இத்தகைய திட்டத்தை வகுத்துள்ள முதல் மாநிலம் கர்நாடகா.
... புல் அவுட் ...
தலைமைச் செயலர் தலைமையிலான ஒரு உயர்மட்ட குழுவால் 15 துறைகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட 105 காலநிலை இலக்குகள் ஒவ்வொரு மாதமும் ஆய்வு செய்யப்படுகின்றன.
நீர் பயன்பாட்டு திறன், வறட்சியை தாங்கும் பயிர்கள், சிறுதானியங்களின் சாகுபடி, வேளாண் காடு வளர்ப்பு, ஆற்றல் திறன், உள்ளூர் மரக்கன்றுகள் நடும் இயக்கங்கள் மூலம் கிராமங்கள் அளவிலான காலநிலை திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
கர்நாடகா ஏற்கனவே தரிசு நிலங்கள், விவசாய நிலங்கள், கால்வாய் பகுதிகளில் ஐந்து கோடி மரக்கன்றுகளை நடும் இலக்கை நிர்ணயித்துள்ளது. மேலும், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியில், 50 சதவீத இலக்கை கர்நாடகா கடந்துள்ளது.
டி. மகேஷ்,
இயக்குநர்,
சுற்றுச்சூழல் மேலாண்மை மற்றும் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம்
