அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்ற கர்நாடகா ஆர்வமாக உள்ளது: சிவகுமார்
அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்ற கர்நாடகா ஆர்வமாக உள்ளது: சிவகுமார்
ADDED : செப் 08, 2026 04:00 AM

பெங்களூரு: ''செயற்கை நுண்ணறிவு, விண்வெளி, அறிவியல் ஆராய்ச்சி போன்ற துறைகளில் அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்ற கர்நாடகா ஆர்வமாக உள்ளது,'' என, முதல்வர் சிவகுமார் கூறினார்.
அமெரிக்காவின் 250வது ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு, பெங்களூரில் உள்ள அமெரிக்க துாதரகத்தில், அமெரிக்க துாதர் செர்ஜியோ கோர் தலைமையில் விழா நடந்தது. இதில், முதல்வர் சிவகுமார் பேசியதாவது:
இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான உறவு, பாரம்பரிய ஈடுபாட்டை தாண்டி வளர்க்கிறது. தொழில்நுட்பம், கல்வி, புத்தாக்கம், ஆராய்ச்சி, முதலீடு, கலாசாரம் ஆகிய துறைகளில் இரு நாடுகள் இடையிலான ஒத்துழைப்பை ஆழப்படுத்த வேண்டும். வாஷிங்டனும், டில்லியும் நாடுகளுக்கு இடையிலான கூட்டாண்மைக்கு வழிகாட்டலாம். ஆனால் பெங்களூரும், சிலிக்கான் பள்ளத்தாக்கும் சக்திவாய்ந்த தொழில்நுட்ப பரிமாணத்தை அளிக்கின்றன.
செயற்கை நுண்ணறிவு, விண்வெளி, மேம்பட்ட உற்பத்தி, அறிவியல் ஆராய்ச்சி போன்ற துறைகளில் அமெரிக்காவுடன் இணைந்து நெருக்கமாக பணியாற்ற கர்நாடகா ஆர்வமாக உள்ளது. நாளையை தொழில்நுட்பங்களை வடிவமைத்து, உலகை வழிநடத்தும் நாடுகளில் ஒன்றாக திகழ்வதே கர்நாடகாவின் லட்சியம்.
கர்நாடகாவில் 1,000க்கும் மேற்பட்ட அமெரிக்க நிறுவனங்கள் செயல்படுகின்றன. 80,000க்கும் மேற்பட்ட அமெரிக்க குடிமக்கள் பெங்களூரில் வசிக்கின்றனர். அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்கள், முதலீடுகளை ஆதரிக்கும் சூழ்நிலையை, கர்நாடகா உருவாக்கி வருகிறது. கிவின் சிட்டி, குறை கடத்தி பூங்கா உருவாக்கப்படுகிறது. ஏ.ஐ., மையம், ஏ.ஐ., பல்கலைக்கழகம், ஏ.ஐ., தொழில்நுட்ப பூங்காவை அமைக்கவும் திட்டமிட்டு வருகிறோம். இந்த உலகம் பெங்களூரு வழியாக தான் இந்தியாவை பார்க்கிறது.
குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லாவின் விண்வெளி பயணம், லட்சக்கணக்கான இளம் இந்தியர்களுக்கு உத்வேகம் அளித்தது. அறிவியல், தொழில்நுட்பம் ஒன்றிணையும் போது எதுவும் சாதிக்க முடியும் என நிரூபித்து காட்டியது.
இவ்வாறு அவர் பேசினார்.
