ADDED : செப் 08, 2026 04:00 AM
தங்கவயல்: வீடு புகுந்து கொள்ளை அடித்த வழக்குகளில் இருவரை போலீசார் கைது செய்து, 7.73 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள், பணத்தை பறிமுதல் செய்தனர்.
தங்கவயல் போலீஸ் மாவட்டத்தில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, இதுவரை கண்டுபிடிக்கப்படாமல் இருந்து வந்த, 'வீடு புகுந்து கொள்ளை' வழக்குகளில் தொடர்புடையோர், கொள்ளை அடிக்கப்பட்ட பொருட்களை கண்டறிய, காமசமுத்திரம் போலீஸ் நிலைய எஸ்.ஐ., கிரண்குமார் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டிருந்தது.
இந்த சிறப்பு குழுவினர் மேற்கொண்ட நடவடிக்கையில், ஆந்திரா பங்காருபாளையத்தை சேர்ந்த வம்சி, 34, லட்சுமிபதி, 36, ஆகிய இருவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.
இவர்கள் பங்கார்பேட்டை, ஆண்டர்சன்பேட்டை பகுதிகளில் நடந்த கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. இவர்களிடமிருந்து 4.70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 30 கிராம் தங்க நகைகள், 265 கிராம் வெள்ளி நகைகள், குற்றச் செயலுக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் காமசமுத்திரம் போலீஸ் நிலைய பகுதியில் உபேந்திரா என்பவரை வழிமறித்து கொள்ளை அடித்த வழக்கில் 2.63 லட்சம் ரூபாயையும் பறிமுதல் செய்தனர்.
இதன்படி மொத்தம் 7.73 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகள், பணம் பறிமுதல் செய்யப்பட்டன.
