UPDATED : அக் 09, 2026 12:00 AM
ADDED : அக் 08, 2026 07:14 PM

– நமது நிருபர் –: ஆசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற, கர்நாடகாவை சேர்ந்த, எட்டு வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுத்தொகை சமீபத்தில் பல மடங்கு உயர்த்தப்பட்டது. அதாவது, தங்கம் வென்றவர்களுக்கு ஒரு கோடி ரூபாய்; வெள்ளி வென்றவர்களுக்கு 75 லட்சம் ரூபாய்; வெண்கலம் வென்றவர்களுக்கு 50 லட்சம் ரூபாய் பரிசு தொகையாக முதல்வர் சிவகுமார் அறிவித்தார்.
இதற்கு வாழ்த்து தெரிவித்து, கர்நாடக ஒலிம்பிக் சங்க தலைவர் கோவிந்தராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை:
மாநில அரசின் அறிவிப்பால், விளையாட்டு வீரர்கள் ஊக்கம் அடைந்துள்ளனர். ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்ற, நம் மாநிலத்தை சேர்ந்த 20 வீரர்களுக்கும் தலா, ஐந்து லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டு உள்ளது.
இதெல்லாம், வரலாற்றில் முதன் முறையாக நடக்கிறது.
அதுபோல, சிறப்பாக செயல்படும் விளையாட்டு வீரர்களுக்கு, அரசு பணியில் 2 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவதெல்லாம் சிறந்த திட்டமாகும்.
ஒலிம்பிக் இலக்கு திட்டத்தின் மூலம் பயிற்சி பெறும் வீரர்களுக்கு, தலா, 10 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கி, மாநில அரசு சாதனை படைத்து உள்ளது. மாநில அரசுக்கு எனது வாழ்த்துகள். இதுபோன்ற அறிவிப்புகள் விளையாட்டு வீரர்களிடம் ஊக்கத்தை அதிகப்படுத்தும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
