ADDED : ஆக 06, 2026 09:31 PM

- நமது நிருபர் -
கர்நாடகாவை சேர்ந்த இளைஞர், நடப்பாண்டில் உலக கோப்பை ஹாக்கி போட்டியில் விளையாடும் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். உலக கோப்பை வெல்வது, இவரது குறிக்கோளாகும்.
ஹாசன் மாவட்டம், அரிசிகெரே தாலுகாவின், ஹொன்னேனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மோஹித், 24. இவருக்கு சிறு வயதில் இருந்தே, விளையாட்டில் ஆர்வம் அதிகம்.
குறிப்பாக, ஹாக்கி விளையாட்டு மீது தீராக்காதல். உயர் நிலை பள்ளியில் படிக்கும் போது, 2015ல் கொடிகே கிராமத்தின் விளையாட்டு பயிற்சி பள்ளியில் சேர்ந்தார். அங்கு ஹாக்கி பயிற்சியாளரிடம் பயிற்சி பெற துவங்கினார்.
கடந்த 2018 வரை பயிற்சி பெற்றார். துவக்கத்தில் இருந்தே, கோல் கீப்பராக திறமையை காட்டினார். அந்த திறமை மோஹித்தை, இந்தியாவின் தேசிய அணியில் கோல் கீப்பராக, உலக கோப்பை போட்டியில் பங்கேற்க அழைத்து சென்றுள்ளது.
இம்முறை உலக கோப்பைக்கு, தேர்வான இந்திய அணியில் இடம் பெற்ற, கர்நாடகாவின் ஒரே விளையாட்டு வீரர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஏற்கனவே இந்தியாவின் ஜூனியர் அணியில், இந்தியா சார்பில் விளையாடி பதக்கங்கள் வென்றவர். இப்போது சீனியர் அணியிலும் இடம் பெற்றுள்ளார்.
ஆகஸ்ட் 15 முதல், 30ம் தேதி வரை, நெதர்லாந்து மற்றும் பெல்ஜியம் நாட்டில் நடக்கவுள்ள உலக ஹாக்கி போட்டியில், கோல் கீப்பராக விளையாடுவார். இம்முறை இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் பெற்றுத்தருவது, அவரது குறிக்கோளாகும்.
சசிகுமார் - ஆஷாராணி தம்பதியின் மகனான இவர், கிராமத்தை சேர்ந்தவர்களாலும் விளையாட்டில் ஜொலிக்க முடியும் என்பதற்கு, சிறந்த எடுத்துக்காட்டு. அவர் தங்கப்பதக்கம் பெற வேண்டும் என, கிராமத்தினர் வாழ்த்துகின்றனர்.
