போதை பயன்படுத்துவோர் மீது வழக்கு கர்நாடக போலீசார் அதிரடி நடவடிக்கை
போதை பயன்படுத்துவோர் மீது வழக்கு கர்நாடக போலீசார் அதிரடி நடவடிக்கை
ADDED : மே 16, 2026 03:34 AM
பெங்களூரு: போதைப்பொருட்கள் விற்பனையை கட்டுப்படுத்த, உறுதி பூண்டுள்ள பெங்களூரு போலீசார், போதைப்பொருள் விற்பவர்கள் மட்டுமின்றி, பயன்படுத்துவோர் மீதும் வழக்கு பதிவு செய்து, நடவடிக்கை எடுக்கின்றனர்.
இது குறித்து உயர் போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:
கர்நாடகாவில் போதைப்பொருளை, முழுமையாக ஒழிக்க வேண்டும் என்றால், அதை பயன்படுத்துவோரை கட்டுப்படுத்த வேண்டும். கடந்த நான்கு மாதங்களில், போதைப்பொருள் விற்றவர்கள் மீது, பதிவான வழக்குகளை விட, அதை பயன்படுத்தியோர் மீது, அதிகமான வழக்குகள் பதிவாகியுள்ளன.
சிறைக்கு செல்ல போதைப்பொருள் பயன்படுத்தி, முதன் முறையாக போலீசாரிடம் சிக்கனால், எச்சரித்து வீட்டுக்கு அனுப்புவர். இரண்டாவது, மூன்றாவது முறை போதைப்பொருள் பயன்படுத்தி சிக்கினால், சிறைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படும். போதைப்பொருளை கட்டுப்படுத்த, இதை பயன்படுத்துவோரை கண்காணிக்கிறோம்.
போதைப்பொருள் பயன்படுத்துவோர் மீது, 2023 வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விற்றவர் மீது வழக்கு பதிவானது. 2024 முதல், போதைப்பொருள் பயன்படுத்தியவர் மீதும், நடவடிக்கை எடுக்க துவங்கினோம்.
அந்த ஆண்டு வெறும் 32 வழக்குகள் பதிவாகின. 2025ல் 900 வழக்குகள் பதிவாகின. ஆனால் நடப்பாண்டு ஜனவரி முதல் மே 12 வரை போதைப்பொருள் பயன்படுத்தியோர் மீது, 1,800 வழக்குகள் பதிவாகியுள்ளன.
மென் பொறியாளர்கள், கல்லுாரி மாணவர்கள், பணக்கார குடும்பங்களை சேர்ந்த இளைஞர்கள், இளம் பெண்களை குறி வைத்து, போதைப்பொருள் நெட்ஒர்க் செயல்படுகிறது .
கல்லுாரி, பேயிங் கெஸ்ட் மையங்கள், ஹாஸ்டல்கள் அருகில், போதைப்பொருள் விற்கப்படுகிறது. மொத்தமாக விற்கும் நபர்கள், இடைத்தரகர்களுக்கு திருட்டுத்தனமாக, போதைப்பொருள் சப்ளை செய்கின்றனர். இவர்கள் மாணவர்களுக்கும், மென்பொறியாளர்களுக்கும் விற்கின்றனர்.
சோதனை பெங்களூரு மேற்கு மண்டலத்தில், ஆறு கல்லுாரிகள், இரண்டு ஹாஸ்டல்களில், திடீர் சோதனை நடத்தி, மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. 1,200 மாணவர்களின் சிறுநீர் மாதிரி சேகரித்து, ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டது. இதில், 31 பேர் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதியானது.
வரும் நாட்களில், கிழக்கு, வட கிழக்கு, வடக்கு, தெற்கு, தென் கிழக்கு, வட மேற்கு மண்டலங்களில் உள்ள கல்லுாரிகள், ஹாஸ்டல்கள், பேயிங் கெஸ்ட்களில் சோதனை நடத்தப்படும். மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்படும்.
வெளிநாடுகளில் இருந்து, சிந்தடிக் போதைப்பொருட்கள், பெங்களூருக்கு அதிக அளவில் வருகின்றன. விமானத்தின் கார்கோ சேவையை பயன்படுத்தி, பெங்களூருக்கு போதைப்பொருள் கொண்டு வருகின்றனர். இங்கிருந்தே இந்தியாவின் மற்ற நகரங்களுக்கு சப்ளையாகிறது.
தாய்லாந்து நாட்டில் வசிக்கும் சில இந்தியர்கள், அங்கிருந்து நேரடியாக பெங்களூருக்கு போதைப்பொருட்களை சப்ளை செய்கின்றனர். தாய்லாந்தில், உயர் ரக கஞ்சா எளிதாக கிடைக்கிறது.
இதை, பேக்கிங் செய்து கார்கோ சேவை மூலமாக, பெங்களூருக்கு அனுப்புகின்றனர். தங்க கடத்தல்காரர்களை கஸ்டம்ஸ் அதிகாரிகள், டி.ஆர்.பி., அதிகாரிகள் உன்னிப்பாக கண்காணிக்கின்றனர். எந்த தந்திரத்தை பின்பற்றி, தங்கம் கடத்தினாலும், கண்டுபிடிக்கின்றனர்.
விமான நிலையத்தில்
எனவே, தங்கம் கடத்தி வந்தவர்கள், தற்போது அந்த தொழிலை விட்டு போதைப்பொருட்கள் கடத்தலை துவங்கியுள்ளனர். எனினும், இதை கட்டுப்படுத்த கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில், கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
நடப்பாண்டு பெங்களூரில் போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது. இதன் விளைவாக அதிகமான வழக்குகள் பதிவாகின்றன. ஜனவரி முதல், மே 12 வரை, 190.18 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வெளிநாட்டு நபர்கள் உட்பட, 2,639 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
