UPDATED : அக் 31, 2026 12:00 AM
ADDED : அக் 30, 2026 10:54 PM
பெங்களூரு: ஒரு டன் கரும்புக்கு, 4,500 ரூபாய் விலை நிர்ணயிக்க வேண்டும். சுவாமி நாதன் அறிக்கையை செயல்படுத்த வலியுறுத்தி, இன்று ‘கர்நாடகா பந்த்’ நடத்துவதாக, கரும்பு விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
இது குறித்து விவசாய சங்கத்தலைவர் சூனப்பா பூஜாரி நேற்று அளித்த பேட்டி:
ஒரு டன் கரும்புக்கு, 4,500 ரூபாய் விலை நிர்ணயிக்க வேண்டும். சுவாமிநாதன் அறிக்கையை செயல்படுத்துவது உட்பட எங்களின் கோரிக்கையை, அரசு நிறைவேற்ற வேண்டும். கோரிக்கைகளை வலியுறுத்தி, நாளை (இன்று) ‘கர்நாடகா பந்த்’ மற்றும் ‘சிறை நிரப்பும்’ போராட்டம் நடத்துவோம்.
இன்று காலையில் இருந்தே, மாநிலத்தின் முக்கியமான நெடுஞ் சாலைகளில் சாலை மறியல் போராட்டத்தை தொடங்குவோம். நெடுஞ்சாலை மறியல், கர்நாடகா பந்த் மற்றும் சிறை நிரப்பும் போராட்டத்தில், லட்சக்கணக்கான விவசாயிகள் பங்கேற்பர்.
எங்கள் வயிற்றில் அடிப்பதை, அரசு நிறுத்த வேண்டும். ஒரு டன் கரும்புக்கு, 4,500 ரூபாய் விலை நிர்ணயிக்கும் வரை, எங்களின் போராட்டம் நிற்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
