/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
வெளிமாநில பஸ்களில் பாதுகாப்பு வசதி கர்நாடக போக்குவரத்து துறை எச்சரிக்கை
/
வெளிமாநில பஸ்களில் பாதுகாப்பு வசதி கர்நாடக போக்குவரத்து துறை எச்சரிக்கை
வெளிமாநில பஸ்களில் பாதுகாப்பு வசதி கர்நாடக போக்குவரத்து துறை எச்சரிக்கை
வெளிமாநில பஸ்களில் பாதுகாப்பு வசதி கர்நாடக போக்குவரத்து துறை எச்சரிக்கை
ADDED : நவ 25, 2025 05:54 AM
பெங்களூரு: ஆந்திராவின், கர்னுால் அருகில் ஆம்னி பஸ்சில் தீப்பிடித்து பலர் இறந்த சம்பவத்தை அடுத்து, வெளி மாநிலங்களில் இருந்து கர்நாடகாவுக்கு வரும், பாதுகாப்பு வசதிகள் இல்லாத பஸ்களுக்கு அனுமதியில்லை என, கர்நாடக போக்குவரத்து துறை எச்சரித்துள்ளது.
இதுகுறித்து கர்நாடக போக்குவரத்துத் துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது:
இந்தியா முழுதும் செல்ல உரிமம் பெற்றுள்ள தனியார் ஆம்னி பஸ்கள், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து, கர்நாடகாவுக்கு வருகின்றன. இந்த பஸ்கள் சிலவற்றில் பாதுகாப்பு வசதிகள் இருப்பது இல்லை. இது பயணியருக்கு அபாயத்தை ஏற்படுத்துகின்றன.
அனுமதி மறுப்பு பயணியரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, கர்நாடக அரசு பல விதிகளை வகுத்துள்ளது. பஸ்களில் அவசர நேரத்தில் வெளியேற, அவசர கதவுகள் இருக்க வேண்டும். முதலுதவி சிகிச்சை பெட்டி, தீ விபத்தை கட்டுப்படுத்தும் கருவி உட்பட அனைத்தும் இருப்பது கட்டாயம்.
இந்த விதிகளை வெளி மாநிலங்களில் இருந்து, கர்நாடகாவுக்கு வரும் ஆம்னி பஸ்களும் தவறாமல் பின்பற்ற வேண்டும். இல்லையென்றால் மாநிலத்தில் நுழைய அனுமதி அளிக்கப்படாது. திடீரென நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, படிப்படியாக நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளோம். முதற்கட்டமாக வெளி மாநிலங்களில் இருந்து, கர்நாடகாவுக்கு வரும் பஸ்களில் சோதனை நடத்தப்படும்.
பயணியரின் பாதுகாப்புக்கு தேவையான சாதனங்களை பொருத்தும்படி உத்தரவிடப்படும். நிர்ணயித்த நேரத்தில் பொருத்தா விட்டால், அபராதம் விதிக்கப்படும் என எச்சரிப்போம்.
சோதனை நடத்தி எச்சரிக்கை விடுத்த பின்னரும் பாதுகாப்பு சாதனங்களை பொருத்தாவிட்டால் சம்பந்தப்பட்ட பஸ்களின் உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும். வாகன பர்மிட் தற்காலிகமாக முடக்கப்படும். வாகன பதிவு அலுவலகத்துக்கு தகவல் கொடுத்து, நடவடிக்கை எடுக்கப்படும்.
அவசர கதவுகள் பொது மக்கள் பயணம் செய்யும் பஸ்களில், அவசர கதவுகள் இருப்பதை உறுதிப்படுத்திய பின்னரே, வாகன பதிவு மற்றும் பஸ்களின் தகுதி சான்றிதழ் புதுப்பிக்கப்படும். இதே விதிமுறை வெளி மாநிலங்களின் பஸ்களுக்கும் பொருந்தும். இவற்றில் பயணம் செய்யும் பயணியருக்கு எந்த தொந்தரவும் ஏற்படக்கூடாது.
அனைத்திந்திய உரிமம் வைத்துள்ள பஸ்களின் உரிமங்களை ரத்து செய்யும் அதிகாரம், மாநில போக்குவரத்து துறைக்கு இல்லை என்றாலும், அவற்றை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் அதிகாரம் உள்ளது. முதலில் எச்சரிப்போம்; பஸ் உரிமையாளர்கள் பொருட்படுத்தாவிட்டால், உரிமங்களை நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுப்போம்.
எனவே கர்நாடக பஸ்களை மட்டுமின்றி, வெளி மாநிலங்களின் பஸ்களையும் நாங்கள் சோதனையிடுவோம். பயணியரின் பாதுகாப்புக்கு தேவையான சாதனங்கள் இல்லை என்றால், கர்நாடகாவுக்குள் நுழைய கூடாது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

