/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கரூர் சம்பவம் தானாக நடந்தது திருமாவளவன் புது கண்டுபிடிப்பு
/
கரூர் சம்பவம் தானாக நடந்தது திருமாவளவன் புது கண்டுபிடிப்பு
கரூர் சம்பவம் தானாக நடந்தது திருமாவளவன் புது கண்டுபிடிப்பு
கரூர் சம்பவம் தானாக நடந்தது திருமாவளவன் புது கண்டுபிடிப்பு
ADDED : அக் 07, 2025 05:03 AM

சென்னை: “கரூரில், 41 பேர் உயிரிழந்த சம்பவம் தன்னிச்சையாக நடந்தது,” என, வி.சி., தலைவர் திருமாவளவன் கூறினார்.
அவர் அளித்த பேட்டி:
கரூர் சம்பவத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு, வி.சி., சார்பில் தலா, 50,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படும். அத்துடன், வி.சி., கட்சி தலைமை அலுவலகத்தில், 41 மெழுகுவர்த்தி ஏற்றி, அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்படும். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தில் தகுதியானவர்களுக்கு, அரசு வேலை வழங்க வேண்டும் என்பது எங்களது கோரிக்கை.
இந்த உயிரிழப்பு தன்னிச்சையாக நடந்த சம்பவம். இதில், த.வெ.க., தரப்பினருக்கு எந்த உள்நோக்கமும் இல்லை. திட்டமிட்டு செய்தனர் என்று கூற முடியாது. அதேபோல், தி.மு.க.,வும் எந்த துாண்டுதலையும் செய்திருக்க முடியாது.
வன்முறை வெறியாட்டம் நடந்து, 41 பேர் பலியாகவில்லை. தற்காத்து கொள்ள நடந்த முயற்சியின் விளைவால், ஏறி மிதித்து மூச்சு திணறி இறந்திருக்கின்றனர். இதில், உள்நோக்கம் இருக்க வாய்ப்பில்லை என, பொதுமக்கள் உணர்ந்துள்ளனர்.
சதி திட்டம் இருக்கிறதா என்பதை கண்டறிய புலனாய்வு செய்யப்படுகிறது. அதன் விசாரணைக்கு பின்தான், நடந்தவை குறித்து முழுமையாக தெரியவரும். ஆனால், பொத்தம் பொதுவாக பார்த்தால், இது நெரிசல் பலி.
இதற்கு, விஜய் தார்மீக பொறுப்பு ஏற்றிருக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கருத்து. அரசின் மீதோ, முதல்வர் மீதோ பழிசுமத்தும் போக்கு ஏற்புடையது இல்லை.
தேர்தலுக்கு முன், மதுபான கடைகள் மூட வேண்டும். கரூர் சம்பவத்தில் கூட, ஏராளமான இளைஞர்கள் மது குடித்துவிட்டு வந்திருப்பது புலனாய்வில் தெரிய வருகிறது. இந்த நெரிசலுக்கு, டாஸ்மாக் கடை, போதை பொருட்களும் காரணமாக உள்ளன. இதில், முதல்வர் நல்ல முடிவை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.