/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
சுற்றுலா
/
கர்நாடகாவின் காஷ்மீர் ஹிமவத் கோபாலசுவாமி மலை
/
கர்நாடகாவின் காஷ்மீர் ஹிமவத் கோபாலசுவாமி மலை
ADDED : டிச 11, 2025 05:59 AM

- நமது நிருபர் -:
இமயமலை பூலோக சொர்க்கம். இதன் அழகை ரசிக்க அனைவருக்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை. கர்நாடகாவில் வசிக்கும் பலருக்கும் இமயமலையை பார்க்க வேண்டும் என்ற ஆசையும், கனவும் இருக்கும். இவர்கள் அவ்வளவு துாரம் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. கர்நாடகாவிலேயே அதுபோன்ற மலை உள்ளது. சாம்ராஜ் நகர் மாவட்டம், குண்டுலுபேட் தாலுகாவில் ஹிமவத் கோபாலசுவாமி மலை உள்ளது. இது பூலோக கைலாசமாக கருதப்படுகிறது. மலை மீது வரலாற்று பிரசித்தி பெற்ற கோபாலசுவாமி கோவில் உள்ளது. கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு அதிகமாக உள்ளது. மலையை பனி முழுமையாக மூடியுள்ளது. இந்த மலையில் ஆண்டு முழுதும் பனிப்பொழிவு இருப்பதால், ஹிமவத் என பெயர் ஏற்பட்டது.
பனி மலை பனிப்பொழிவு மலையின் அழகை அதிகரித்துள்ளது. காண கண் கோடி வேண்டும். தொலைவில் இருந்து பார்க்கும் போது, இமயமலையை பார்ப்பது போன்றே தோற்றம் அளிக்கிறது. மலையில் இயற்கை அழகு குவிந்து கிடக்கிறது.
பொதுவாக வார இறுதி நாட்களில், இம்மலைக்கு அதிகமான சுற்றுலா பயணியர் வருவது வழக்கம். ஆனால் பனி மூடிய மலையின் அற்புதமான காட்சியை பார்த்து ரசிக்க, தினமும் பெருமளவில் வருகின்றனர். 'இது நமது கர்நாடகாவின் காஷ்மீர்' என அழைத்து மகிழ்கின்றனர்.
இது இயற்கை காட்சிகள் நிறைந்த சுற்றுலா தலம் மட்டுமல்ல; ஆன்மிக தலமாகவும் போற்றப்படுகிறது. மலை உச்சியில் அமைந்துள்ள கோபாலசுவாமி கோவில் வரலாற்று பிரசித்தி பெற்றதாகும்.
கோவில் வளாகம் காலை முதல் மதியம் வரை அடர்த்தியான பனி மூட்டமாக காட்சி அளிக்கிறது. காலையில் குளிர்ந்த காற்று, வெண்மையான பனி மூட்டம் சுற்றுலா பயணியரை வெகுவாக கவர்கிறது. மலைப்பாதை பனியால் மூடியதால், வாகன பயணியர் மிகுந்த கவனத்துடன் செல்கின்றனர்.
கோடைக் காலத்தில் பனிப்பொழிவுடன் குளுகுளுவென இருக்கும். இதனால் கோடை காலத்தில் சுற்றுலா பயணியர் அதிகம் வருகின்றனர். உச்சியில் நின்று சுற்றிலும் பார்த்தால், கண்ணுக்கு எட்டிய துாரம் வரை பசுமையான காட்சிகள் தென்படும்.
மரங்கள், தோட்டங்கள், வனப்பகுதிகளை காணலாம். உச்சியில் இருந்து இவற்றை பார்க்கும் போது, புதிய அனுபவமாக இருக்கும்.
குளிர் காற்று சிலுசிலுவென உடலை வருடி செல்லும் குளிர்ந்த காற்று; அக்கம், பக்கத்தில் பனி மூட்டத்தில் இருந்து, எட்டி பார்த்து வரவேற்கும் மரங்கள்; பறவைகளின் ரீங்காரத்தை கேட்டபடி மலையேறுவதும், மலையில் சுற்றி வருவதும் ஏற்படும் சுகத்தை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.
அனுபவித்தால் மட்டுமே உணர முடியும். இதை அனுபவிக்க கர்நாடகாவின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, வெளி மாநிலங்கள், நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணியர் குவிகின்றனர். சுற்றுலா பயணியர் வருகை அதிகரிப்பால், இங்கு கடை வைத்துள்ளோருக்கு நல்ல வருவாய் கிடைக்கிறது.
குளிர்காலம் முடிவதற்குள், கர்நாடகாவின் காஷ்மீருக்கு வாருங்கள். ஒருமுறை வந்து சென்றால், மனதுக்கும், உடலுக்கும் புத்துணர்ச்சி கிடைக்கும்.
எப்படி செல்வது?
பெங்களூரில் இருந்து 172 கி.மீ., மைசூரில் இருந்து 59 கி.மீ., மாண்டியாவில் இருந்து 77 கி.மீ., துாரத்தில் சாம்ராஜ்நகர் உள்ளது. சாம்ராஜ் நகரில் இருந்து 33 கி.மீ., துாரத்தில் குண்டுலுபேட் உள்ளது. இங்கிருந்து, 20 கி.மீ., தொலைவில் ஹிவமத் கோபாலசுவாமி மலை உள்ளது.
முக்கிய நகரங்களில் இருந்து குண்டுலுபேட்டுக்கு கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்கள், ரயில்கள் இயக்கப்படுகின்றன. தனியார் பஸ்கள், வாகன வசதியும் உள்ளது. குண்டுலுபேட்டில் இறங்கி வாடகை வாகனங்களில் மலைக்கு செல்லலாம்.
விமானத்தில் வருவோர், மைசூரு விமான நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து மலைக்கு செல்ல வாடகை வாகனங்கள் ஏராளம். ஒரு குறிப்பிட்ட துாரத்திற்கு பின், அரசு பஸ்கள் தான் அனுமதிக்கப்படுகிறது.
அனுமதி நேரம்: காலை 8:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை.
தொடர்பு எண்: 98450 57719, 98861 44733
அருகில் உள்ள தலங்கள்: பண்டிப்பூர் தேசிய பூங்கா, முதுமலை தேசிய பூங்கா, பிளிகிரி ரங்கநாதசுவாமி கோவில்.

