/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
சுற்றுலா
/
எந்த கோடையிலும் வற்றாத தேவகங்கை குளம்
/
எந்த கோடையிலும் வற்றாத தேவகங்கை குளம்
ADDED : டிச 04, 2025 05:43 AM

சமீப ஆண்டுகளாக மலைப்பகுதி மாவட்டங்களில், வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கிறது. குறிப்பாக கோடைக்காலத்தில் வெப்பம் மக்களை வறுத்து எடுக்கும். ஆறுகள், ஏரிகள் போன்ற நீர் நிலைகள் வற்றும். ஆனால் பிதனுார் அருகில் உள்ள, தேவகங்கை குளம் எப்போதும் வற்றுவது இல்லை.
ஷிவமொக்கா மாவட்டம், ஹொசநகர் தாலுகாவின், பிதனுார் நகர் அருகில் தேவகங்கை குளம் அமைந்துள்ளது. இது வரலாற்று பிரசித்தி பெற்றதாகும். மாவட்டத்தில் மற்ற ஏரி, கிணறு, குளங்களில் தண்ணீர் வற்றினாலும், தேவகங்கை குளம் வற்றுவதில்லை. குளம் கலை நயத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணியரை தன் வசம் சுண்டி இழுக்கிறது.
எந்த காலத்திலும் குளத்தில் ஒரு அடி நீர் கூட குறைந்தது இல்லை என்பது, ஆச்சரியமான விஷயமாகும். இது அறிவியலுக்கு சவால் விடுகிறது. குளத்தை அமைத்தவர் மிகுந்த அறிவாளியாக இருப்பார் என்பதற்கு, இதன் வடிவமைப்பே சாட்சியாக உள்ளது. மலை மீதுள்ள பெரிய ஏரியில் இருந்து கற்களால் அமைக்கப்பட்ட குழாய்கள் வழியாக, தண்ணீர் குளத்தை வந்தடைகிறது. குளத்தில் நிரம்பும் கூடுதல் நீர், கீழ்ப்பகுதிக்கு பாய்ந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதிகமான மழை பெய்யும் பகுதிகளில் உள்ள நீர் நிலைகளும், கோடைக்காலத்தில் வறட்சி அடையும்.
ஆனால் வெப்பத்தின் தாக்கம் மிக அதிகமாக இருந்தாலும், தேவகங்கை குளம் நிரம்பியே காணப்படுகிறது. இந்த குளத்தை பார்ப்போர் ஆச்சரியப்படாமல் இருக்க முடியாது. கெளதி அரசர்கள் காலத்தில், குளம் அமைக்கப்பட்டது, கருங்கற்கள் பயன்படுத்தி கட்டப்பட்ட குளத்தின் நடுவே, கல் தொட்டில் போன்று அமைக்கப்பட்டுள்ளது. கீழே இறங்கி செல்ல படிகள் உள்ளன.
பெரிய குளத்தில் இருந்து, நீர் பாய்ந்து செல்லும் திசையில் ஏழு சிறிய குளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 4ம் நுாற்றாண்டிலேயே அறிவியல் நுணுக்கத்துடன் குளத்தை அமைத்துள்ளனர். தரை மட்டத்தில் இருந்து 15 அடி ஆழத்தில் குளம் அமைக்கப்பட்டுள்ளது.
குளத்தின் ஒரு புறம் சிவன் கோவில் உள்ளது. மற்றொரு புறம் அரசர் காலத்தில் பூந்தோட்டம் இருந்ததாம். மைசூரில் பிருந்தாவனம் உருவாக, இந்த பூந்தோட்டம் உந்துதலாக இருந்தது என, வரலாற்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
கெளதி அரசர்கள் தங்களின் சமஸ்தான ராணியர் நீராடுவதற்காக, இந்த குளத்தை அமைத்ததாக கூறப்படுகிறது. கலை நயமிக்க குளத்தை பார்க்க, சுற்றுலா பயணியர் குவிகின்றனர். ஆனால் இவர்கள் பிளாஸ்டிக் கவர்கள், மதுபானம், குளிர்பான பாட்டில்களை குளத்தின் சுற்றுப்பகுதிகளில் வீசுகின்றனர். அவ்வப்போது துப்புரவு பணியாளர்கள் சுத்தம் செய்கின்றனர்.
மிகவும் அமைதியான சூழ்நிலையில், தேவகங்கை குளம் அமைந்துள்ளது. இங்கு சிறிது நேரம் அமர்ந்து பொழுது போக்கினால், மனதுக்கும், உட லுக்கும் புத்துணர்ச்சி கிடைக்கும்.
எப்படி செல்வது? ஷிவமொக்காவில் இருந்து, 26 கி.மீ., பெங்களூரில் இருந்து 378 கி.மீ., மங்களூரில் இருந்து, 161 கி.மீ., தொலைவில் ஹொசநகர் உள்ளது.
முக்கிய நகரங்களில் இருந்து, ஹொசநகருக்கு கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்கள், ரயில், தனியார் பஸ் வசதி உள்ளது. விமானத்தில் வருவோர், ஷிவமொக்கா விமான நிலையத்தில் இறங்கி, வாடகை வாகனத்தில் செல்லலாம்
- நமது நிருபர் - .

