/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
சுற்றுலா
/
ஜெயமங்களி வன பூங்கா குழந்தைகள் விரும்பும்
/
ஜெயமங்களி வன பூங்கா குழந்தைகள் விரும்பும்
ADDED : ஜன 01, 2026 06:27 AM

- நமது நிருபர் -
இன்று புத்தாண்டு பிறந்துள்ளது. பலரும் நண்பர்கள், குடும்பத்துடன், சுற்றுலா செல்கின்றனர். குட்டீஸ்களுக்கு பிடித்தமான ஜெயமங்களி பூங்காவுக்கு செல்வோரும் அதிகம். இங்கு மான்கள் அதிகம் உள்ளன. இயற்கையான காட்சிகளும் கண்ணைக் கவரும் வகையில் இருக்கும்.
கர்நாடகாவின் அனைத்து மாவட்டங்களிலும், பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன. சுற்றுலா பயணியருக்கு பிடித்தமான இடங்களில், ஜெயமங்களி பூங்காவும் ஒன்றாகும்.
துமகூரு மாவட்டம் மதுகிரி தாலுகாவின், மைதேனஹள்ளி என்ற குக்கிராமத்தில், ஜெயமங்களி பூங்கா உள்ளது. இங்கு மான்களின் எண்ணிக்கை அதிகம். இங்கு வேறு பல விலங்குகளும் உள்ளன.
ஜெயமங்களி வெறும் பூங்கா மட்டுமல்ல, அடர்த்தியான வனப்பகுதியாகும். அபூர்வமான மரங்கள், தாவரங்களை இங்கு காணலாம். இந்த வனப்பகுதியில் காணப்படும் மான்கள், வித்தியாசமான உருவம் கொண்டவை. இத்தகைய மான்கள், இந்தியாவின் சில தேசிய பூங்காக்களில் தான், அதிகமாக தென்படுகின்றன. அதே போன்று, ஜெயமங்களியிலும் உள்ளன. எனவே குழந்தைகளுடன் வரும் சுற்றுலா பயணியர் அதிகம்.
இந்த வனத்துக்குள், விசாலமான ஏரியும், பசுமையான புல்வெளிகளும் உள்ளன. இயற்கை காட்சிகள் நிறைந்துள்ளதுடன், மான்கள் அதிகம் வசிப்பதால், ஜெயமங்களி பாதுகாக்கப்பட்ட மான்கள் சரணாலயமாக அறிவிக்கும்படி, சுற்றுச்சூழல் வல்லுநர்கள் நெருக்கடி கொடுத்தனர். அதை ஏற்ற மாநில அரசு, பாதுகாக்கப்பட்ட மான்கள் சரணாலயமாக அறிவித்தது. 2002ன் கணக்கு எடுப்பின்படி, 800 மான்கள் இருந்தன. இப்போது, அவற்றின் எண்ணிக்கை அதிகரித்திருக்கலாம்.
வனவிலங்குகள் மட்டுமின்றி, மருத்துவ குணம் உடைய மூலிகைச்செடிகளும் இங்கு அதிகம் உள்ளன.
இங்கு பலவிதமான பட்டாம்பூச்சிகள், பறவைகளையும் காணலாம். இப்பகுதியில் மிகவும் அமைதியான சூழ்நிலை நிலவுகிறது. பரபரப்பான நகர வாழ்க்கையை வெறுத்து, சில மணி நேரம் அமைதியான இடத்தில் பொழுது போக்க விரும்புவோருக்கு, தகுந்த இடம் இது. குறிப்பாக குட்டீஸ்களை வெகுவாக கவர்கிறது. துள்ளித்திரியும் மான்களை பார்ப்பது, அவர்களை குஷிப்படுத்தும்.
வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்களில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து, சுற்றுலா பயணியர் வருகின்றனர். இன்று புத்தாண்டை கொண்டாட, சுற்றுலா தலங்களுக்கு செல்லும் திட்டம் இருந்தால், ஜெயமங்களிக்கு செல்லுங்கள்.
பஸ், ரயிலில்
செல்லலாம்
பெங்களூரில் இருந்து, 112 கி.மீ., துமகூரில் இருந்து 46 கி.மீ., மைசூரில் இருந்து 200 கி.மீ., மங்களூரில் இருந்து 376 கி.மீ., மாண்டியாவில் இருந்து, 157 கி.மீ., தொலைவில் மதுகிரி உள்ளது. மதுகிரியில் இருந்து 25 கி.மீ., தொலைவில், ஜெயமங்களி மான்கள் சரணாலயம் உள்ளது. கர்நாடகாவின் முக்கிய நகரங்களில் இருந்து, மதுகிரிக்கு கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்கள், ரயில்கள் இயக்கப்படுகின்றன. தனியார் பஸ் வசதியும் உள்ளது.
அனுமதி நேரம் காலை 6:00 முதல், மாலை 6:00 மணி வரை கட்டணம் நபருக்கு 100 ரூபாய் கேமரா 50 ரூபாய்.

