/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
சுற்றுலா
/
சுற்றுலா பயணியரை ஈர்க்கும் கே.குடி
/
சுற்றுலா பயணியரை ஈர்க்கும் கே.குடி
ADDED : ஜன 01, 2026 06:28 AM

- நமது நிருபர் -
கர்நாடகாவின் சாம்ராஜ்நகர் பிரபலமான மாவட்டம். பின் தங்கிய மாவட்டம் என்ற பட்டப்பெயர் இருந்தாலும், பல அற்புதமான இடங்களை, தன்னுள்ளே மறைத்து வைத்துள்ளது. இந்த மாவட்டத்தில், மலை மஹாதேஸ்வரா மலை உட்பட, பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன. இவைகள் எல்லாம் அற்புதமானவை. இவற்றில் கியாத்தநாயகன குடி என, அழைக்கப்படும் கே.குடியும் ஒன்று. இது, இயற்கை அழகு நிறைந்த மலைப்பிரதேசம்.
எலந்துார் தாலுகாவில் உள்ள கே.குடி, மலைகள், பசுமையான வனப்பகுதிகளை நிறைய கொண்டுள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான பறவை இனங்களும் அடைக்கலம் பெற்றுள்ளன. பறவைகளை பற்றி, ஆய்வு செய்வோருக்கு தகுதியான இடமாகும். குறிப்பாக அழிவின் எல்லையில் உள்ள, அரிய வகை பறவைகள் இங்குள்ளன.
கே.குடியில் யானை, புலி, காட்டெருமை, மான், கரடி உட்பட பல்வேறு வன விலங்குகளையும் காணலாம். சாம்ராஜ்நகரின் கிழக்கு திசையில் உள்ள கே.குடி, கடல் மட்டத்தில் இருந்து, 1,450 அடி உயரத்தில் உள்ளது. இயற்கை ஆர்வலர்கள், விலங்கு ஆர்வலர்கள் மற்றும் சுற்றுலா பயணியர் அதிக எண்ணிக்கையில், இங்கு வருகின்றனர்.
இங்குள்ள வனத்துறை கட்டடங்கள் மீது, வன விலங்குகளின் ஓவியங்கள், சுற்றுலா பயணியரை கவர்கின்றன. சிறார்களுக்கு விலங்குகள் பாதுகாப்பு குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், இந்த ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. ஆனாலும், அவை எல்லாம் ஓவியங்கள் போன்றே தென்படாது; தத்ரூபமாக உள்ளன. கே.குடியில் விலங்குகள் சபாரியும் உள்ளது. சபாரி செல்லும் போது, வன விலங்குகள் தென்படவில்லை என்ற வருத்தத்தை, ஓவியங்கள் போக்குகின்றன.
எப்போதும் வாகனங்களின் சத்தம், பணி அழுத்தம் என, பரபரப்பான வாழ்க்கையில் உழலும் மக்களுக்கு, மன அமைதியை தரும் இடம் கே.குடி. விடுமுறை நாட்களில், சாம்ராஜ்நகருக்கு வருவோர் கே.குடியை பார்க்க மறக்காதீர்கள்.

