'கடல் தாமரை புத்தக பூங்காவுக்கு மேலும் ஒரு ஒளிவிளக்கு' நுாலகத்தை அலங்கரிக்கும் 'காவிய தலைவன்' புத்தகங்கள்
'கடல் தாமரை புத்தக பூங்காவுக்கு மேலும் ஒரு ஒளிவிளக்கு' நுாலகத்தை அலங்கரிக்கும் 'காவிய தலைவன்' புத்தகங்கள்
ADDED : ஏப் 12, 2026 01:07 AM

பெங்களூரு: கடல் தாமரை புத்தக பூங்கா என்ற நுாலகம் பொழுது போக்கும் இடமாக இருக்காது. அறிவை வளர்க்கும் களஞ்சியமாக இருக்கும். இங்கு உள்ள புத்தகங்கள் மகத்தானவை. வரலாற்றை ஆய்வு செய்ய நினைப்பவர்களுக்கும், போட்டி தேர்வுக்கு தயாராகுவோருக்கும் இந்த நுாலகம் அமுத சுரபியாக இருக்கும்,'' என்று கர்நாடக மாநில எம்.ஜி.ஆர்., நற்பணி மன்ற முன்னாள் இணை செயலர் எஸ்.எம்.பழனி புகழாரம் சூட்டினார்.
பெங்களூரு சிவாஜிநகர் குயின்ஸ் சாலை தினமலர் அலுவலகத்தில் உள்ள, கடல் தாமரை புத்தக பூங்கா நுாலகத்திற்கு, கர்நாடக மாநில எம்.ஜி.ஆர்., நற்பணி மன்ற முன்னாள் இணை செயலரும், சமூக ஆர்வலருமான எஸ்.எம்.பழனி தலைமையில், எம்.ஜி.ஆரின் முரட்டு பக்தர்களான கர்நாடக மாநில எம்.ஜி.ஆர்., மன்ற முன்னாள் செயலர்கள் சிவசண்முகம், சிம்சன் சண்முகம், ஆசிரியை பிரியா ஆகியோர் நேற்று வந்தனர்.
அதேபோல தங்கவயலில் இருந்து எம்.ஜி.ஆரின் தீவிர விசுவாசிகளான, தங்கவயல் தொகுதி அ.தி.மு.க., செயலர் பொன் சந்திரசேகர், கர்நாடக மாநில அ.தி.மு.க., முன்னாள் தலைமை பொது குழு உறுப்பினர் சீனிவாசன், தங்கவயல் தொகுதி அ.தி.மு.க., இணை செயலர் கிருபாகரன் ஆகியோரும் வந்தனர்.
கர்நாடக மாநில எம்.ஜி.ஆர்., ரசிகர்கள் சார்பாக, எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு, அவரது சாதனைகள், மக்களுக்காக அவர் செய்த கொடைகளை குறிக்கும் மக்கள் ஆசான் தியாக செம்மல், மக்கள் நெஞ்சில் எம்.ஜி.ஆர்., எட்டாவது வள்ளல், புகழ் மன செம்மல் உட்பட 100 க்கும் மேற்பட்ட புத்தகங்களை, கடல் தாமரை புத்தக பூங்காவுக்கு எஸ்.எம்.பழனி நன்கொடையாக வழங்கி மகிழ்ந்தார்.
அமுத சுரபி பின், எஸ்.எம்.பழனி கூறியதாவது:
கடல் தாமரை புத்தக பூங்காவை நுாலகம் என்று, ஒரே வார்த்தையில் கூறி முடித்து விட முடியாது. மனித சமுதாயத்தை மாற்றி அமைக்கும் சிற்பியாக இங்கு உள்ள புத்தகங்கள் உள்ளன.
நமது எண்ணங்களை ஆவணப்படுத்தவும், அடுத்த தலைமுறைக்கு அதை கொண்டு செல்லவும், கடந்த காலங்களை அறியவும் புத்தகங்களே நமக்கு உதவும். புத்தகங்கள் இல்லாத வாழ்க்கையை கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. நுாலகங்களை அடிப்படையாக கொண்ட சமூகமே அற்புதமானது.
பொழுதை போக்கும் இடமாக ஒரு காலத்தில் நுாலகங்கள் இருந்தன. ஆனால் கடல் தாமரை புத்தக பூங்கா நுாலகம் கண்டிப்பாக பொழுது போக்கும் இடமாக இருக்காது. அறிவை வளர்க்கும் களஞ்சியமாக இருக்கும். இங்கு உள்ள புத்தகங்கள் மகத்தானவை.
வரலாற்றை ஆய்வு செய்ய நினைப்பவர்களுக்கும், போட்டி தேர்வுக்கு தயாராகுவோருக்கும் இந்த நுாலகம் அமுத சுரபியாக இருக்கும். இங்கு ஒரு முறை வந்து பாருங்கள்; மெய்மறந்து விடுவீர்கள்.
ஏதோ ஒரு வகையில் தினமலருடன் தொடர்பு கொண்டு இருப்பவர்களுக்கு, எனது மனமார்ந்த வாழ்த்துகள். எம்.ஜி.ஆர்., புத்தகங்களை கொடுத்து உள்ளோம். இங்கு வந்து தலைவரின் வாழ்க்கை வரலாற்றை படித்து தெரிந்து கொள்ளுங்கள் என்று அழைப்பு விடுக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்மாதிரி
சிறு வயதில் இருந்தே எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகை நான். தலைவரை பற்றி படிக்க எண்ணிலடாங்காத புத்தகங்கள் உள்ளன என்பதை, இந்த நுாலகத்திற்கு வந்தே தெரிந்து கொண்டேன். எம்.ஜி.ஆர்., எப்போதும் மக்கள் மனதில் இருப்பவர். அவரை அனைவரும் முன்மாதிரியாக எடுத்து கொள்ள வேண்டும். இங்குள்ள புத்தகங்களை எம்.ஜி.ஆர்., ரசிகர்கள் கட்டாயம் படிக்க வேண்டும்.
- பிரியா, ஆசிரியை, செயின்ட் ஜோசப் மேல்நிலை பள்ளி
சந்திப்பு
கடந்த 1965 ல் எம்.ஜி.ஆர்., மன்றம் துவங்கியதில் இருந்து, எம்.ஜி.ஆரை பல முறை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவருடன் தொடர்ந்து நான்கு மணி நேரம் அரட்டை அடித்து உள்ளேன். அது எல்லாம் மறக்க முடியாத நாட்கள். அவரை இன்றும் நினைக்காத நாட்கள் இல்லை. கடல் தாமரை புத்தக பூங்காவில், புத்தகங்கள் வடிவில் அவர் வாழ உள்ளதை நினைத்து மகிழ்ச்சியாக உள்ளது.
- சிவசண்முகம்,
கர்நாடக மாநில எம்.ஜி.ஆர்., மன்ற முன்னாள் செயலர்
கையில் பச்சை
எம்.ஜி.ஆருக்கு பாரத ரத்னா விருது கிடைத்ததை கொண்டாடும் வகையில், சிவாஜிநகரில் ரசிகர் மன்றம் சார்பில் பாராட்டு நிகழ்ச்சி நடத்தியது மறக்க முடியாத நினைவு. அந்த நாட்கள் இன்னும் கண்முன்பு பசுமை மாறாத நினைவாக உள்ளது. அந்த நிகழ்ச்சியில் ரசிகர்கள் மன்றத்திற்கு நன்கொடையாக 10,000 ரூபாய் கொடுத்தார். அவரது பெயரை எனது வலது கையில் பச்சை குத்தி உள்ளேன்.
- சிம்சன் சண்முகம்,
கர்நாடக மாநில எம்.ஜி.ஆர்., மன்ற முன்னாள் செயலர்
தாமரை சின்னம்
தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட ஏழு நாட்களில், அ.தி.மு.க.,வை ஆரம்பித்தார் எம்.ஜி.ஆர்., கட்சியின் சின்னமாக தாமரை இருக்கும் என்று, என்னை போன்று கோடான கோடி தொண்டர்கள் நினைத்தனர். ஆனால் இரட்டை இலை கட்சி சின்னமாக இருந்தது. கட்சியில் பல பொறுப்புகளை கையாண்டு உள்ளேன். எம்.ஜி.ஆருடன் பழகிய நாட்கள் மறக்க முடியாதவை.
-பொன் சந்திரசேகர், தங்கவயல் தொகுதி அ.தி.மு.க., செயலர்
