/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கே.சி., வேலி திட்ட இரண்டாம் கட்ட பணிகள் துவக்கம்
/
கே.சி., வேலி திட்ட இரண்டாம் கட்ட பணிகள் துவக்கம்
ADDED : செப் 05, 2025 04:50 AM
பெங்களூரு: ''கே.சி., வேலி முதல்கட்ட திட்டத்தால், கோலார், சிக்கபல்லாபூரில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து உள்ளது,'' என, முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
பெங்களூரில் முதல்வரின் காவேரி இல்லத்தில், 'கே.சி., வேலி எனும் கோலார் - சிக்கபல்லாபூர் வேலி' திட்டத்தின், இரண்டாம் கட்ட பணியை, நேற்று முதல்வர் சித்தராமையா துவக்கி வைத்தார். துணை முதல்வர் சிவகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின், அவர் கூறியதாவது:
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க, முந்தைய எங்கள் ஆட்சியில், 'கே.சி., வேலி' முதல்கட்ட பணிகள் துவங்கியது. இப்பணி முடிந்து, தினமும் சுத்திகரிக்கப்பட்ட நீர், கோலார், சிக்கபல்லாபூரில் உள்ள ஏரிகளை நிரப்பி வந்தன. இந்த நீர், குடிக்க உகந்தது அல்ல. அதேவேளையில், நிரம்பிய ஏரிகளால் சுற்றுப்பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
இத்திட்டத்தால் நிரம்பிய ஏரி பகுதிகளில் நிலத்தடி நீர் அதிகரித்துள்ளது. எனவே, இம்மாவட்ட எம்.எல்.ஏ.,க்கள், நிகழ்ச்சி ஏற்பாடு செய்து, இத்திட்டத்தால் ஏற்பட்ட நன்மைகள் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
தற்போது இரண்டாவது கட்டமாக, இத்திட்டத்தின் கீழ், கோலாரில் உள்ள 30 ஏரிகள் நிரப்பும் பணி துவங்கி உள்ளது.
சிலர் இத்திட்டத்துக்கு எதிராக பொய் பிரசாரம் செய்து வருகின்றனர். அது உண்மையில்லை என்பதை இப்போது தெரிய வந்துள்ளது.
இரண்டாம் கட்ட பணிகள், டிசம்பர் மாதத்துக்குள் நிறைவு பெறும். மொத்தம், 446 கோடி ரூபாய் மதிப்பில் நடந்து வரும் கே.சி., வேலி திட்டத்தால், கோலார், சிக்கபல்லாபூர் மாவட்ட விவசாயிகள் பயனடைவர்.
இவ்வாறு அவர் கூறினார்.