/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
முதல்வர் பதவி கிடைக்காத விரக்தியில் கார்கே
/
முதல்வர் பதவி கிடைக்காத விரக்தியில் கார்கே
ADDED : ஜூலை 30, 2025 08:52 AM
பெங்களூரு : முதல்வர் பதவி கிடைக்காதது குறித்து, காங்., தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அண்மையில் பொதுக்கூட்டம் ஒன்றில் பகிரங்கமாக அதிருப்தி தெரிவித்தது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
காங்கிரசின் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, பல ஆண்டுகளாக முதல்வர் பதவி மீது கண் வைத்துள்ளார். ஆனால் அவரது கனவு நிறைவேறவில்லை. எம்.பி., மத்திய அமைச்சர் உட்பட, பல பதவிகள் கிடைத்தன. 2019 லோக்சபா தேர்தலில் தோல்வியுற்ற இவரை, காங்., மேலிடம் ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுத்தது. தற்போது இவர் ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவராகவும், கட்சியின் தேசிய தலைவராகவும் பதவி வகிக்கிறார்.
வீண் விஜயபுராவில், கடந்த 27ம் தேதி நடந்த நிகழ்ச்சியில் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, '1999ல் எனக்கு முதல்வராக வாய்ப்பு இருந்தது. நான் எதிர்க்கட்சி தலைவராக இருந்தேன். கட்சியை ஆட்சியில் அமர்த்த பாடுபட்டேன். ஆனால், நான்கு மாதங்களுக்கு முன் கட்சியின் மாநில தலைவராக நியமிக்கப்பட்ட எஸ்.எம்.கிருஷ்ணா முதல்வரானார். கட்சிக்காக உழைத்தது நான். முதல்வரானது கிருஷ்ணா. என் உழைப்பு நீரில் அடித்துச் செல்லப்பட்டு விட்டது' என விரக்தியுடன் தெரிவித்தார்.
வீரப்ப மொய்லி மல்லிகார்ஜுன கார்கேவின் பேச்சு, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது பேச்சு குறித்து அரசியல் விமர்சகர்கள் கூறியது:
தனக்கு முதல்வர் பதவி கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்திலும், விரக்தியிலும் மல்லிகார்ஜுன கார்கே பேசியுள்ளார். நடந்ததை அவர் வயது காரணமாக மறந்துவிட்டாரா அல்லது இப்போதுள்ள தலைமுறையினருக்கு எதுவும் தெரியாது என்று பேசிவிட்டாரா என்று தெரியவில்லை.
மறைந்த எஸ்.எம்.கிருஷ்ணா, பிரஜா சோசலிஸ்ட் கட்சியில் இருந்து விலகி, 1971ல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். அப்போதே மாண்டியா தொகுதியில் இருந்து லோக்சபாவுக்கு காங்கிரஸ் எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டார். பின், கர்நாடக மேல்சபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட கிருஷ்ணா, தேவராஜ் அர்ஸ் அமைச்சரவையிலும் இடம்பெற்றார். காங்கிரஸ் கட்சியிலேயே நீடித்த அவர், மத்திய அரசில் பல்வேறு அமைச்சர் பதவிகளை அலங்கரித்தார்.
மாநில காங்கிரஸ் தலைவராக 1999ல் பதவி வகித்த எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு அப்போது முதல்வர் பதவி தேடி வந்தது. அவருக்கு முன்பாக மாநில தலைவராக வீரப்ப மொய்லி பதவி வகித்து வந்தார்.
வீரப்ப மொய்லி மாநில தலைவராக இருந்த காலகட்டத்தில் முதல்வராக இருந்தவர் ஜே.எச்.படேல். அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவர் தான் மல்லிகார்ஜுன கார்கே. காங்கிரஸ் கட்சியின் பாரம்பரிய வழக்கப்படி, மாநில தலைவராக இருந்த வீரப்ப மொய்லி தான் அடுத்து முதல்வராக வந்திருக்க வேண்டும்.
ஜாதி அரசியல் அதன்படி அடுத்து மாநில தலைவராக பதவி வகித்த எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு முதல்வர் பதவி கிடைத்தது. எப்படிப் பார்த்தாலும் முதல்வர் பதவிக்கு அந்த காலகட்டத்தில் மல்லிகார்ஜுன கார்கே பெயர் பரிசீலிக்கப்படவே இல்லை. 2008ல் தான் மாநில தலைவரானார் கார்கே.
ஒருவேளை அடுத்து முதல்வர் பதவி தனக்கு கிடைக்கும் என அவர் ஆசைப்பட்டிருக்கலாம். ஆனால், 2006ல் காங்கிரஸ் கட்சியில் இணைந்த சித்தராமையா அடுத்தடுத்து விஸ்பரூபம் எடுத்தார்.
தரம்சிங் முதல்வரானார். எஸ்.எம்.கிருஷ்ணா தேசிய அரசியலுக்கு சென்றதால், இங்கே தன்னை சித்தராமையா நிலைநிறுத்திக் கொண்டார். அத்துடன் ஜாதி அரசியலும் சேர்ந்தது. கார்கேவுக்கு பதவி கிடைக்காததற்கு அதுவும் ஒரு காரணம்.
வருத்தம் முதல்வர் பதவி கிடைக்காத வருத்தத்திலும், விரக்தியிலும் இப்படி பகிரங்கமாக பேசியது ஆச்சரியமாக உள்ளது. எதிர்கால அரசியலை மனதில் கொண்டு, அவர் அப்படி பேசியிருக்கலாம்.
கார்கேவின் ராஜ்யசபா உறுப்பினர் பதவிக் காலம், அடுத்த ஜூனில் முடியவுள்ளது. அதன்பின் அவர் மாநில அரசியலுக்கு வர விரும்புவதாக தோன்றுகிறது. மற்ற தலைவர்களை போல, கட்சி மாறி அரசியல் செய்ததில்லை. தனக்கு நெருக்கமானவர்களிடம், 'என் கால கட்டத்து அரசியல் தலைவர்கள், முதல்வர் பதவியை அனுபவித்துள்ளனர். எனக்கு கிடைக்கவில்லை' என, வருத்தத்துடன் கார்கே புலம்புகிறார்.
இரண்டரை ஆண்டு முதல்வர் கூச்சல்கள் ஒலிக்கும் வேளையில், தலித் சமுதாயத்தினருக்கு முதல்வர் பதவி வழங்க வேண்டும் என்ற கோஷமும் சேர்ந்தே ஒலிக்கிறது. இதை தனக்கு சாதகமாக்கிக் கொள்ள அவர் விரும்புகிறார் என்று தோன்றுகிறது.
கட்சிக்காக பல காலம் உழைத்த, தலித் தலைவரான மல்லிகார்ஜுன கார்கேவுக்கு, முதல்வர் பதவி வழங்கும்படி ஏற்கனவே மேலிடத்திடம், பலரும் முறையிட்டுள்ளனர்.
இதை மனதில் கொண்டே, மேலிடத்தின் கவனத்தை ஈர்க்க முதல்வர் பதவி குறித்து பகிரங்கமாக மல்லிகார்ஜுன் கார்கே பேசியிருக்கலாம்.
அமைச்சர் ராஜண்ணா கூறுவது போன்று, செப்டம்பரில் அரசியல் புரட்சி ஏற்பட்டு, முதல்வரை மாற்ற வேண்டிய சூழ்நிலை உருவானால், கார்கே முதல்வரானாலும் ஆச்சரியப்பட முடியாது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.