கார்கேவுக்கு மனநிலை சரியில்லை: சலவாதி நாராயணசாமி பாய்ச்சல்
கார்கேவுக்கு மனநிலை சரியில்லை: சலவாதி நாராயணசாமி பாய்ச்சல்
ADDED : ஏப் 09, 2026 02:12 AM

பெங்களூரு: ''காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தன் நாக்கை கட்டுப்படுத்த வேண்டும். அவருக்கு மனநிலை சரியில்லை,'' என மேல்சபை எதிர்க்கட்சி தலைவர் சலவாதி நாராயணசாமி தெரிவித்தார்,
மல்லேஸ்வரம் பா.ஜ., அலுவலகத்தில், நேற்று அவர் அளித்த பேட்டி:
ஆர்.எஸ்.எஸ்., மற்றும் பா.ஜ., குறித்து, மல்லிகார்ஜுன கார்கே அவமதிப்பாக பேசியது கண்டிக்கத்தக்கது. நாடு முழுதும் மக்கள் அவரை சபிக்கின்றனர். தொண்டர்களை கொல்லும்படி துாண்டுவது சரியல்ல.
கர்நாடக வெறுப்பு பேச்சு தடை மசோதாவுக்கு, அங்கீகாரம் கிடைத்துள்ளது.
உணர்வுகளை துாண்டும் வகையில் பேசிய கார்கே மீது, இந்த சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யலாம். எனவே, போலீஸ் டி.ஜி.பி.,யிடம் பா.ஜ., புகார் அளித்துள்ளது. அவரது பேச்சால் எங்கள் தொண்டர்கள் கோபத்தில் உள்ளனர்.
தன் வீட்டினருக்கு தொந்தரவு கொடுத்தவர்களுக்கு எதிராக, கார்கே பேசுவதை விட்டு விட்டு, ஆர்.எஸ்.எஸ்., மற்றும் பா.ஜ.,வுக்கு எதிராக பேசியுள்ளார்.
மல்லிகார்ஜுன கார்கேவின் பேச்சை, அ வரது மகன் பிரியங்க் கார்கே ஆதரித்துள்ளார். இது வேப்பங்காய்க்கு, பாகற்காய் சாட்சி என்பதை போன்றுள்ளது. இவர்களின் மனநிலை ஒன்றுதான்.
மல்லிகார்ஜுன கார்கேவின் பேச்சை, காங்கிரசில் யாரும் ஆதரிக்கவில்லை. பிரியங்க் மற்றும் மல்லிகார்ஜுன கார்கேவை, காங்கிரஸ் ஓரங்கட்டியுள்ளது.
இவர்கள் இருவரும் தாங்கள் இருக்கிறோம் என்பதை காட்டுவதற்காக, இது போன்று பேசுகின்றனர். அப்பா, மகனின் தலையில் விஷப்பாம்பை விட, கொடுமையான விஷம் உள்ளது.
அப்பா, மகன் மீது மத்திய அரசு, தானாக புகார் பதிவு செய்து, திஹார் சிறைக்கு அனுப்ப வேண்டும். அப்போதுதான் அவர்கள் விஷமத்தனமாக பேசுவதை நிறுத்துவர்.
வயதான கார்கேவுக்கு ஓய்வு அவசியம். சிறைக்கு அனுப்பினால் ஓய்வு கிடைக்கும். மகனும் அங்கேயே இருந்தால், உதவியாக இருக்கும்.
வாயை திறந்தால், தங்களை தலித்துகள் என, கார்கே கூறுகிறார். தலித் என்பதால் என்ன வேண்டுமானாலும் பேசக்கூடாது. ஒரு கட்சியின் தேசிய தலைவரான பின், ஜாதியை தவிர்த்து பேச வேண்டும்.
இவ்வாறு கூறினார்.
