/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
குத்துச்சண்டையில் மிளிரும் குடகு இளம்பெண்
/
குத்துச்சண்டையில் மிளிரும் குடகு இளம்பெண்
ADDED : நவ 14, 2025 05:13 AM

- நமது நிருபர் -: குத்துச்சண்டையில் குடகுவை சேர்ந்த இளம் பெண், தேசிய அளவில் சாதித்து வருகிறார். மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று 'சிறந்த குத்துச்சண்டை வீராங்கனை' என்ற விருதும் பெற்றுள்ளார்.
குடகு மாவட்டம், நல்கேரியை சேர்ந்த அனில் -- அஷிகா தம்பதியின் மகள் அல்லமடா சான்சி போலம்மா, 20. சிறு வயதில் இருந்தே விளையாட்டில் சுட்டியாக இருந்தார்.
குத்துச்சண்டையின் மீது இருந்த ஈர்ப்பு காரணமாக, பெற்றோரிடம் தன் விருப்பத்தை தெரிவித்தார். அவர்களும், மகளின் விருப்பத்தை ஏற்று, குத்துச்சண்டை பயிற்சிக்கு அனுப்பினர்.
குத்துச்சண்டை அகாடமியிலும் சிறப்பாக பயிற்சி பெற்றார். பள்ளிகள், மாவட்டம், மாநில அளவில் நடந்த பல்வேறு போட்டிகளில் பங்கேற்று, பல விருதுகளை பெற்றுள்ளார். கடந்தாண்டு இளைஞர் மேம்பாடு, விளையாட்டு துறை சார்பில் நடந்த 'முதல்வர் கோப்பை'யில், பெங்களூரு நகரம் மண்டலம் பிரிவில் பங்கேற்றார். 63 கிலோ எடை பிரிவில், தங்கப்பதக்கம் வென்றார்.
அனைத்து போட்டியிலும் அவர் வெற்றி பெற்றதால், 'சிறந்த குத்துச்சண்டை வீராங்கனை' என்ற விருதை பெற்றார். அதுபோன்று நடப்பாண்டு நடந்த 'தசரா விளையாட்டு போட்டி'யிலும், 63 - 66 கிலோ எடை பிரிவில், தங்கப்பதக்கம் வென்றார்.
தேசிய அளவில் கர்நாடகாவுக்காக பங்கேற்க விரும்பும் இவர், நாட்டுக்காக ஒலிம்பிக்கில் பங்கேற்க வேண்டும் என்றும் விரும்புகிறார். இதற்காக கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
இவர் விளையாட்டில் மட்டுமல்ல, படிப்பிலும் படுசுட்டியாக உள்ளார். பெங்களூரில் தனியார் பள்ளியில் படித்த இவர், எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் சி.பி.எஸ்.சி., பாடத் திட்டத்தில் 500க்கு 477 மதிப்பெண் பெற்றுள்ளார்.

