ADDED : அக் 16, 2025 11:21 PM

தாய்லாந்தில் கடந்த மாதம் நடந்த சர்வதேச இரு சக்கர வாகன போட்டியில் குடகை சேர்ந்த 23 வயது பட்டதாரி வாலிபர் சாதித்துள்ளார்.
குடகு மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர் டாக்டர் நளினி மோனந்த சோமையா. மைசூரு பல்கலைக்கழகத்தில் தாவரவியல் பேராசிரியராக உள்ளார். இவரது மகன் தஸ்மை கரியப்பா மோனந்தா, 23. பள்ளி படிப்பை மடிகேரியில் படித்த இவர், பி.யு.சி., மற்றும் பட்டப்படிப்பை மைசூரில் முடித்தார்.
மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிறு வயது முதல் இரு சக்கர வாகனம் ஓட்டுவதில் அலாதி பிரியம் கொண்டிருந்தார். இந்திய மோட்டார் ஸ்போர்ட்சில் வளர்ந்து வரும் இளம் நட்சத்திரமாக தஸ்மை உள்ளார். பல போட்டிகளில் தன் திறமையை வெளிப்படுத்தி உள்ளார்.
கடந்த 2023ல் அவர் 'ஸ்டாக் அப் 165 சிசி' பிரிவில் ஒன்பது போட்டிகளில் பங்கேற்றார். இதில், மூன்று போட்டிகளில் கோப்பையை வென்றார். அதே ஆண்டு 'விரூம் டிராக் மீட் ஒன்பதாம் பதிப்பில்' இரண்டாம் இடத்தை பிடித்தார்.
தொடர்ந்து தனது திறமையை வெளிப்படுத்திய அவர், 2024 ல் இந்தியன் நேஷனல் மேட்டார் சைக்கிள் ரேசிங் சாம்பியன்ஷிப் போட்டியில், 165 சிசி பிரிவில் மொத்தம் 10 போட்டிகளில் பங்கேற்றார். இதில், இரண்டில் முதலிடம்; ஆறில் இரண்டாவது இடம்; ஒன்றில் மூன்றாம் இடம் பிடித்தார்.
நடப்பாண்டு தாய்லாந்தில் செப்., 26 முதல் 28 ம் தேதி வரை 'எஸ்.பி., சூப்பர் பைக் 400 சிசி' பிரிவில், இரண்டாம் இடம் பிடித்து நாட்டுக்கே பெருமை சேர்த்தார். குடகு மாவட்டத்தில் இருந்து சர்வதேச மோட்டார் ரேசில் பங்கேற்ற முதல் வீரர் இவர் தான்.
18 வயதில்... இது குறித்து அவர் கூறியதாவது:
சிறு வயது முதலே எனக்கு பைக் ரேஸ் என்றால் மிகவும் பிடிக்கும். தொலைக்காட்சியில் 'மோட்டா ஜிபி' உட்பட பல போட்டிகளை பார்த்து வளர்ந்தேன். என் 18 வது வயதில் 'கேடிஎம் டியூக் 390' பைக் வாங்கினேன். சாமுண்டி மலைகளில் கொண்டை ஊசி வலைகளில் பயணிக்கும் போது அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது.
அப்போது, கே.டி.எம்., சார்பில் நடத்தப்படும் பைக் ரேசில் பங்கேற்றவர்கள், நான் பைக் ஓட்டுவதை பார்த்து, பைக் ரேசில் பங்கேற்க ஊக்கம் அளித்தனர். கோயம்புத்துார், சென்னையில் 2019 மற்றும் 2022 ல் நடந்த 'டிராக் பயிற்சி அகாடமி'யில் சேர்ந்தேன். பயிற்சி முடித்த பின், இந்திய நேஷனல் ரேசிங் போட்டிகளில், 165 சிசி பிரிவில் பங்கேற்க துவங்கினேன்.
ஸ்பெயினை சேர்ந்த மார்க் மார்க்சஸ் தான் என்னுடைய ரோல் மாடல். அவரின் ஆக்ரோஷமான பந்தய பாணி, மன வலிமை, அசைக்க முடியாத உறுதி எனக்கு பிடிக்கும்.
பைக் ரேசிங் குறித்து முதன் முதலில் என் பாட்டிக்கு தான் தெரிவித்தேன். அவர், எனக்கு பொருளாதார ரீதியாக உதவினார். இதனால் பந்தய அகாடமியில் சேர முடிந்தது. பயிற்சி முடித்த பின், என் தாயாருக்கும், அத்தைக்கும் தெரிவித்தேன். அன்று முதல் எனக்கு ஊக்கம் அளித்து வருகின்றனர்.
பெங்களூரு, கோயம்புத்துார், சென்னையில் தொடர்ந்து பயிற்சி பெறுகிறேன். இதில் பெங்களூரு முதன்மை பயிற்சி இடமாக உள்ளது. கொளத்துாரில் உள்ள வேலாசிட்டி இன்டர்நேஷனல் சர்க்யூட் மற்றும் தொம்மசந்திராவில் உள்ள அருவானி கிரிட் டிராக்கில் அடிக்கடி பயிற்சி செய்வேன். அதுமட்டுமின்றி, ஒவ்வொரு மாதமும் சென்னையில் உள்ள மெட்ராஸ் இன்டர்நேஷனல் சர்க்யூட், கோயம்புத்துாரில் உள்ள காரி மோட்டார் ஸ்பீட்வேக்கு சென்று பயிற்சி செய்கிறேன்.
ஆபத்துகள் உண்டு மோட்டார் பந்தயத்தில் ஆபத்துகள் இருப்பது உண்மை தான். இதில் அனுபவம் பெற்ற பின், உங்களின் திறமை மேம்படும் போது, ஆபத்து குறையும். விபத்து ஏறபடும் பட்சத்தில் ரேசர்களை பாதுகாப்பதில் தரமான பந்தய உடை, தலைக்கவசம், கையுறைகள், பூட்ஸ்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
தொழில்முறை பந்தயங்களில் பங்கேற்போருக்கு சர்க்யூட் காப்பீடு உள்ளது. ஆனாலும், புகழ்பெற்ற மருத்துவர்கள், பிசியோதெரபிகளை அணுகுவது அவசியம். சரியான ஊட்டச்சத்துகளை பரிந்துரைப்பர். மோட்டார் பந்தயத்திற்கு உடல், மன வலிமை இரண்டும் தேவை. என் அன்றாட பயிற்சியில் யோகாவுக்கும் இடம் உள்ளது.
இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ் வளர்ந்து வருகிறது. மேலும் ஐ.எஸ்.பி.எல்., எனும் இந்திய சூப்பர் லீக் பந்தய ஆர்வலர்களுக்கு ஒரு அருமையான வாய்ப்பாகும். பந்தயத்தில் ஆர்வமுள்ள, ஆனால் சூப்பர் பைக் சொந்தமாக இல்லாதவர்களுக்கு இது மிகவும் மதிப்பு வாய்ந்தது. தேர்ந்தெடுக்கப்பட்ட ரைடர்களுக்கு, பைக் வழங்க 'டுகாட்டி' நிறுவனம் முன்வருவது, இந்தியாவில் விளையாட்டுக்கு கிடைக்கும் அங்கீகாரமாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -