'தேசிய பாரத் பவர் லிப்டிங்' போட்டி கர்நாடகாவின் சிறப்பு குழந்தைகள் அசத்தல்
'தேசிய பாரத் பவர் லிப்டிங்' போட்டி கர்நாடகாவின் சிறப்பு குழந்தைகள் அசத்தல்
ADDED : அக் 02, 2025 11:11 PM

புதுடில்லியில் நடந்த தேசிய அளவிலான சிறப்பு ஒலிம்பிக் பாரத் பவர் லிப்டிங்கில், கர்நாடகாவை சேர்ந்த குழந்தைகள் பதக்கங்கள் குவித்தனர்.
விளையாட்டு வீரர்களுக்காக, நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒலிம்பிக் போட்டிகளும்; மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டிகளும் நடத்தப்படும்.
அதுபோன்று மனவளர்ச்சி குறைபாடு உள்ள குழந்தைகளுக்காக, மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை சிறப்பு ஒலிம்பிக் பாரத் போட்டி நடத்தப்பட்டு வருகிறது.
டில்லியில் கடந்த மாதம், 23 முதல் 27ம் தேதி வரை, 26 மாநிலங்களை சேர்ந்த 170க்கும் மேற்பட்டோர், 'பவர் லிப்டிங்' போட்டியில் பங்கேற்றனர்.
டில்லியில் உள்ள மைத்ரி கல்லுாரியில் நடந்த பவர் லிப்டிங் போட்டியில், 14 வயது ஆண்கள் பிரிவில், பெங்களூரில் உள்ள விமானப்படை ஆஷா கிரண் பள்ளி மாணவர் மிதுன்; 15 வயது பெண்கள் பிரிவில் காயத்ரி பாட்டீல் ஆகியோர் தங்கப்பதக்கம் பெற்று மாநிலத்துக்கு பெருமை சேர்த்தனர். அதுபோன்று, சீனியர் பிரிவில் ஹொஸ்பேட்டில் உள்ள சத்யா பள்ளியை சேர்ந்த தருண், வெள்ளிப்பதக்கம் வென்றார்.
பவர் லிப்டிங்கில், சரத் ஷெட்டி, அனுஷா ஆகியோர் வெள்ளிப் பதக்கம்; லீலாவதி வெண்கலம் பதக்கம் வென்றனர். மேகா பெட்டாரோ, கவுரவ் ஆகியோர் நான்காவது இடத்தை பிடித்தனர்.
இவர்களில், 14 முதல் 17 வயதுக்கு உட்பட்ட ஜூனியர் பிரிவில், சாகரில் உள்ள சைதன்யா சிறப்பு கல்வி நிறுவன மாணவர்கள் ஷரத் ஷெட்டி; 18 முதல் 21 வயதுக்கு உட்பட்ட சீனியர்கள் பிரிவில், சாகரை சேர்ந்த அனுஷா; 21 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பிரிவில் கோர்லிகொப்பா, ஆனந்த்பூரின் லீலாவதி ஆகியோர் போட்டியிட்டனர்.
இவர்கள் மூலம் மாநிலத்துக்கு இரண்டு தங்கம், மூன்று வெள்ளி, ஒரு வெண்கலம் பதக்கங்கள் கிடைத்தன.
இது குறித்து, சைதன்யா சிறப்பு கல்வி மைய நிறுவனர் சாந்தாலா கூறியதாவது:
இம்மையம், 2013ல் மூன்று சிறப்பு குழந்தைகள் மூலம் துவங்கப்பட்டது. ஆரம்பத்தில் சமூக தொண்டராக, இத்தகைய குழந்தைகளுக்கு அவர்களின் வீடுகளுக்கே சென்று கல்வி கற்பித்து வந்தேன்.
தற்போது ஷிவமொக்கா மாவட்டம், நம்ம சாகரா அருகில் உள்ள மையத்தில், மொத்தம் 62 சிறப்பு குழந்தைகளுக்கு, 15 ஊழியர்கள் மூலம் கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. குழந்தைகளின் ஐ.கியூ., வயது அடிப்படையில், அவர்களுக்கு ஏற்ற பயிற்சி அளிக்கப்படுகிறது.
மேலும், 18 வயதுக்கு மேற்பட்ட சிறப்பு குழந்தைகளுக்கு சாக்பீஸ், தையல், காகித கைவினை போன்ற பல்வேறு திறன்களை கற்றுக் கொடுக்கிறோம். ஸ்பீச் தெரபி, பிசியோதெரபி உட்பட பல பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது. எங்கள் பள்ளி குழந்தைகள், மாநில, தேசிய அளவில், 100க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்றுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -