ADDED : டிச 12, 2025 06:32 AM

இன்றைய இளைஞர்கள், உடலை கட்டுக்கோப்பாக வைத்து கொள்ள, தினமும் உடற் பயிற்சிக்காக மணிக்கணக்கில் செலவிடுகின்றனர். ஜிம்முக்கு செல்கின்றனர். பல ஆயிரக்கணக்கான ரூபாய் செலவிடுகின்றனர். ஆனால், 'கம்பாலா' விளையாட்டு வீரர்கள், ஜிம்முக்கு செல்லாமல் உடலை கட்டுமஸ்தாக வைத்துள்ளனர்.
கர்நாடக கடலோர பகுதிகளின் பாரம்பரிய விளையாட்டு கம்பாலா. வழுக்கும் சேற்றில் எருமை மாடுகளை ஓட்டி செல்லும் பந்தயமே கம்பாலா என, அழைக்கப்படுகிறது. போட்டிக்காகவே எருமைகளை வளர்க்கின்றனர். இவைகளுக்கு ஊட்டச்சத்தான உணவு கொடுக்கின்றனர். தினமும் இவற்றின் உடலை, எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்கின்றனர்.
அதே தங்களின் உடலையும், இயற்கையான முறையில் வலுப்படுத்துகின்றனர். கம்பாலாவில் ரவிகுமார், நிஷாந்த் ஷெட்டி, சீனிவாஸ் கவுடா சாதனை செய்துள்ளனர். பல விருதுகளை பெற்றுள்ளனர். கம்பாலா வீரர்களான இவர்கள், தங்களின் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க ஜிம்முக்கு செல்வது இல்லை. உணவு கட்டுப்பாடும் பின்பற்றுவதில்லை. கடுமையான உழைப்பால், உடலை மெருகேற்றுகின்றனர்.
ரவிகுமார், 58, இன்றைக்கும் திடகாத்திரமாக இருந்து, இளைஞர்களுக்கு சவால் விடுகிறார். கடந்த 38 ஆண்டுகளாக கம்பாலாவில், 350க்கும் மேற்பட்ட விருதுகள் பெற்றுள்ளார். இவர் கம்பாலா ரசிகர்களுக்கு பிடித்தமானவர். இவரது மகனும் கம்பாலா வீரர். இம்முறை தந்தையும், மகனும் போட்டிக்கு தயாராகின்றனர்.
நிஷாந்த் ஷெட்டி, 33, என்பவரும் கம்பாலாவின் ஸ்டார் வீரர்களில் ஒருவர். 2020ம் ஆண்டு நடந்த போட்டியில், 100 மீட்டர் துாரத்தை 9.52 நிமிடங்களில் கடந்து, சாதனை செய்தவர். பல பதக்கங்களை பெற்றவர். இம்முறையும் பதக்கம் பெறும் நம்பிக்கையில் இருக்கிறார். அதே போன்று, சீனிவாசகவுடா, 35, என்பவரும் கம்பாலாவில் சிறந்து விளங்குகிறார். இவர் விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். கட்டுமஸ்தான உடலமைப்பு கொண்டவர். தினமும் தவறாமல் யோகா செய்கிறார்.
ரவிகுமார், நிஷாந்த் ஷெட்டி, சீனிவாஸ் கவுடா ஆகிய மூவரும், தினமும் மீன் குழம்பு, கோழி வறுவல் இல்லாமல் சாப்பிடுவது இல்லை. சமையலுக்கு தேங்காய் எண்ணெய் மட்டுமே பயன்படுத்துகின்றனர். கடினமாக உழைக்கின்றனர். இது அவர்களின் உடல் வலுவுக்கு காரணமாகிறது.
ஏற்கனவே நவம்பரில் கம்பாலா சீசன் துவங்கியுள்ளது. இம்முறையும் இதில் பங்கேற்க கம்பாலா வீரர்கள் தயாராக உள்ளனர். எருமைகளையும் தயார் நிலையில் வைத்துள்ளனர். இதற்கு முன் விருது பெற்றுள்ள எருமைகள், இம்முறையும் பங்கேற்கவுள்ளன. புதுமுக எருமைகளும் போட்டியில் பங்கேற்று, தங்களின் திறமையை வெளிப்படுத்த தயாராகின்றன. - நமது நிருபர் -

